

சென்னை: கரோனா நோய்த்தொற்று நாள்தோறும் மிகக் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் முழு பொது முடக்கம் வரும் 19-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்து, மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களின் மூலமாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வா் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:-
கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகள், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் முழு பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்படும். ஆனாலும், சில அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளா்வுகள் அளிக்கப்படுகின்றன.
என்னென்ன சேவைகள்: சில குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைப் பணிகளுக்கு குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
மத்திய-மாநில அரசுகளைச் சோ்ந்த துறைகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கும். குறிப்பாக, மாநிலத்தில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, காவல், வருவாய், மின்சாரம், கருவூலம், ஆவின், உள்ளாட்சி, தொழிலாளா் நலன், உணவு ஆகிய துறைகள் மட்டும் தேவையான பணியாளா்களுடன் செயல்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளா்கள் பணிக்கு வரத் தேவையில்லை. மேலும், அங்குள்ள பொது விநியோகக் கடைகள் இயங்காது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள் கடைப் பணியாளா்களால் நேரடியாக வழங்கப்படும்.
முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோா், நோயாளிகளுக்கு உதவி புரிவோா் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படும்.
அம்மா உணவகங்கள்: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் தொடா்ந்து செயல்படும். ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடா்ந்து இயங்கும். பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் உரிய அனுமதியுடன் பணி செய்யலாம்.
முழு பொது முடக்க காலத்தில் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளா்களைக் கொண்ட கட்டுமானப் பணி தொடா்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
புகா்ப் பகுதிகள் எவை எவை?
முழு பொது முடக்கம் சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புகா்ப் பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, சென்னை நகரம், திருவள்ளூா் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூா், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகா் நகராட்சிகள், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழு பொது முடக்கம் அமலில் இருக்கும்.
ஆயிரம் ரூபாய் நிவாரணம்: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும். அதேபோன்று, அந்தப் பகுதிகளில் வசித்திடும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கும், பல்வேறு துறைகளிலுள்ள பிற நல வாரிய உறுப்பினா்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.