சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி



சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். 

இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

கோவில்பட்டி கிளைச் சிறையில் கடந்த 21-ஆம் தேதி அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரின் மரணத்திற்கு காரணமான போலீஸார் மீதும், உடல்தகுதிச் சான்று வழங்கிய மருத்துவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

இது போன்ற சம்பவம் இனி தமிழகத்தில் எங்கும் நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும். மேலும், அவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜூன் 26) ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு உயிரிழந்த வியாபாரிகளுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது அறப்போராட்டம் தொடரும். 

ஜூன் 30-ஆம் தேதி அன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அனைத்து மாநில மண்டல மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் காலை 11 மணிக்கு தமிழகத்தில் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் அங்கு சென்று சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை புகார் மனு அளிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை விலக்கிக்கொண்டு, கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்ற வேண்டும். பொதுமுடக்கம் முடிவுற்ற பின்னர் ஜூலை 1 ஆம் தேதி முதல் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com