
குடியுரிமைத் திருத்தச் சட்டக்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரை தரக்குறைவாகப் பேசும் செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை ஆத்துப்பாலத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஷாகின் பாக் எனப்படும் தொடர் காத்திருப்பு போராட்டம் ஏழாவது நாள் நள்ளிரவிலும் தொடர்ந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டதுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் பாஜக, இந்து முன்னணி, பரிவார் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் பேசுகையில்,
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ள போதும், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக நடத்தும் போராட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்றவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல். முதல்வர் மற்றும் பிரதமரை தரக்குறைவாகப் பேசி தரம் தாழ்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்பட வேண்டும் என்றால், மத நல்லிணக்கம் தொடர வேண்டும் எனில் தமிழக அரசும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிஏஏவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், வன்முறையை தமிழக அரசே ஏற்படுத்தி தருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...