இந்து மக்கள் கட்சி பிரமுகர் சுய விளம்பரத்திற்காக நாடகமாடியது அம்பலம்: இருவர் கைது

பெருமாநல்லூர் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி தனது சுய விளம்பரத்திற்காக  நாடகமாடியது புதன்கிழமை அம்பலமானது.
பகவான் நந்து
பகவான் நந்து
Published on
Updated on
1 min read

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி தனது சுய விளம்பரத்திற்காக  நாடகமாடியது புதன்கிழமை அம்பலமானது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர்.

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் பகவான் நந்து (50), இவர் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.  இந்த நிலையில், பகவான் நந்து செவ்வாய்க்கிழமை இரவு இரு  சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் மறித்து, வெட்டித் தாக்கியதாக பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் எவ்வித கலவரமும் ஏற்படாமல் தடுக்க கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் பகவான் நந்துவின் வாகன ஓட்டுநர் ரூத்ரமூர்த்தி(20) திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடிரென ஒரு வாக்கு மூலம் அளித்தார். இந்த வாக்கு மூலத்தில் ரூத்ரமூர்த்தி கூறியது:

நான் பகவான் நந்துவிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது உரிமையாளர் பகவான் நந்து அவரது சுய விளம்பரத்திற்காக, தனது நண்பர்களுடன் ஆலோசித்துபடி, என்னை செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் முதுகில் குத்தச் சொன்னார். அதன் பிறகு பகவான் நந்துவே தனது கைகளால் இரு கைகளிலும் கத்தியால் காயம் ஏற்படுத்திக் கொண்டார். மேலும் இத்தாக்குதலை இதர மதத்தினர், காவி வேஷ்டி அணிந்தவர்கள் ஏற்படுத்தியதாக தெரிவிக்கக் கூறினார். இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைந்து, தனது கட்சியில் செல்வாக்கு பெற நினைத்தார் என வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பகவான் நந்துவின் ஓட்டுநர் ருத்ரமூர்த்தியையும், உடந்தையாக செயல்பட்ட மற்றொரு ஓட்டுநர் மனோஜ்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் கூறியது: இது போன்ற சுய விளம்பரம், லாபத்திற்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது உரிய சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com