
கிருஷ்ணகிரியில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு தன்னார்வு அமைப்பு மூன்று வேளையும் உணவளித்து வருகிறது.
கிருஷ்ணகிரி நகரில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணியில் காவல் துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 500 பேர் களப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷன் சார்பில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் உணவு தயாரித்து அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
அதன்படி ஏப்ரல் பதினான்காம் தேதி வரையில் மொத்தம் 20 நாட்கள், 40 வகையான உணவு வகைகள், இனிப்பு, காரம், வாழைப்பழம், மோர், தயிர் உள்ளிட்ட உணவை தினமும் மூன்று வேளையும் வழங்கி வருகின்றனர். 144 தடை உத்தரவை ஒட்டி அனைத்து உணவகங்கள் அடைக்கப்பட்டதையடுத்து இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மக்களின் கோடைகால குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேஷன் அமைப்பானது கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும் ஐந்து ஏரிகளை தங்களுடைய சொந்த செலவில் தூர்வாரி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...