
நாமக்கல் பயணியர் விடுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.
நாமக்கல்: நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் மீது மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் குற்றச்சாட்டு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்களிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒன்றிய அதிகாரிகளிடையே ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா நிவாரணமாக, தான் வழங்கிய நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் அவரது வீட்டிற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாகவும் எனக்கு புகார் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் பயணியர் மாளிகையில் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதிய உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மக்களவை உறுப்பினர் தொடர்ந்து தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். அந்த வகையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுவரை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துவரும் நிலையில் மக்களவை உறுப்பினர் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். உடனடியாக அவர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இம்முறையில் இங்கிருந்து நகர மாட்டோம் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி, ஆய்வாளர் பொன். செல்வராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் முற்றுகையால் பயணியர் விடுதியில் இருந்து மக்களவை உறுப்பினர் வெளியே வராமல் உள்ளேயே இருந்தார். தொடர்ந்து இரு தரப்பிலும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.