
ஊத்தங்கரை சரக காவல் நிலைய நிலுவைப் புகார்கள் சமரச தீர்வு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சரகத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களில் நிலுவையிலுள்ள புகார் மனுக்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காவல்துறையின் சிறப்பு தலைமை இயக்குனர் ராஜேஷ் தாஸ் ஆலோசனையின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டித் கங்காதர் அறிவுரையின்படி நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் குமரன், கல்லாவி காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச் செல்வன், மத்தூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட புகார் மனுதாரர்கள் கலந்துகொண்டு நிலத்தகராறு, குடும்பப் பிரச்னை, அடிதடி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை செய்து தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூர் உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட புகார் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு கண்டனர்.
நிகழ்ச்சியில் 5 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...