தேசிய தன்னார்வ இரத்த தான நாள்: முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

அக்டோபர் ஒன்றாம் நாள், தேசிய தன்னார்வ இரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தேசிய தன்னார்வ இரத்த தான நாள்: முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி
தேசிய தன்னார்வ இரத்த தான நாள்: முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

அக்டோபர் ஒன்றாம் நாள், தேசிய தன்னார்வ இரத்த தான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றும் இரத்த தானத்தின் அவசியம் குறித்தும், இரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ இரத்த தானம் செய்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்” என்பதாகும்.

தமிழ்நாடு அரசு, அரசு இரத்த வங்கிகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசு இரத்த வங்கி மற்றும் தன்னார்வ இரத்த கொடையாளர்களை இணைத்திடும் வகையில் சமூக ஊடக முகநூல் உருவாக்கியது, இரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் இரத்தத்தை பாதுகாப்பாக அரசு இரத்த வங்கிகளுக்கு எடுத்து செல்ல 10 அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய இரத்த தான ஊர்திகள் வழங்கியது, 5 அரசு இரத்த வங்கிகளுக்கு இரத்த பரிமாற்றம் மூலம் பரவும் நோய்களை பரிசோதனை செய்திட நவீன தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் வழங்கியது, அரசு இரத்த வங்கிகளுக்கு 107 இரத்த வங்கி குளிர்சாதன பெட்டிகள் வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. 
அத்துடன் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் தன்னார்வ இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், அரசு இரத்த வங்கி ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறார்கள்.

கோவிட் - 19 காலக்கட்டங்களில் தொடர் தன்னார்வ இரத்த கொடையாளர்கள், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவிட் - 19 தன்னார்வலர்களிடமிருந்து 1,77,500 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு, 1,74,000 அலகுகள் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ இரத்த கொடையாளர்கள் மூலம் இரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை எய்திட மக்கள் அனைவரும் இரத்த தானம் செய்திட ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com