தஞ்சாவூர்: மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு சுமார் 200 கிலோ எடையுடைய காய்கனிகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேசுவரருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 200 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னர், மகா நந்திகேசுவரர் முன் கோ பூஜை நடைபெற்றது. இதில் பசு மாடுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டன. மேலும், பசுவுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இவ்விழாவில் நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ ஆயிரம் கிலோ அளவுக்கு காய்கறிகள், பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 108 கோ பூஜை நடைபெறும். நிகழாண்டு கரோனா பரவல், தொடர் மழை காரணமாக எளிய முறையில் இவ்விழா நடைபெற்றது. இதில், வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











