ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பெரம்பூர் தொகுதியில் திமுக - அதிமுக  நேரடி போட்டி

தொழிலாளர்கள் நிறைந்த பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவுக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 2:59 am

டி.குமாா்


தொழிலாளர்கள் நிறைந்த பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவுக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. யார் எம்எல்ஏ என்பதை முடிவு செய்யும் சக்தியாக தொழிலாளர்களே உள்ளனர். 

சென்னையின் பழைமையான தொகுதி பெரம்பூர். நடுத்தர,  உயர்நடுத்தர மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவில் வசித்து வருகின்றனர்.

1957-ஆம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலில்  டாக்டர் அம்பேத்கர் பெயரில் கல்லூரி தொடங்கப்பட்டது இங்குதான். பெரம்பூர் தொகுதியில் கொடுங்கையூர்,  கண்ணதாசன் நகர்,  மகாகவி பாரதி நகர், எம்.ஆர்.ந கர், முத்தமிழ் நகர், சர்மா நகர், பி.வி. காலனி, எருக்கஞ்சேரி, மூலக்கடை,  வியாசர்பாடி,  சத்தியமூர்த்தி நகர், முல்லை நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன.  இந்தத் தொகுதியில் 7 முறை திமுகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறையும், அதிமுக, சோஷலிஸ்ட் கட்சி தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் தேவை அதிகமாகவே இருக்கிறது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கே.மகேந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

900 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடுங்கையூர் குப்பைமேட்டில் 400 ஏக்கர் பயன்பாட்டில் உள்ளது. இந்த குப்பைமேட்டில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, கொசுக்களால் உண்டாகும் வியாதிகள்தான் பிரதான பிரச்னையாக உள்ளன.  இந்தக் குப்பைமேட்டை நவீனப்படுத்தி இடமாற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது.  இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. 

பெரு மாநகராட்சிப் பகுதிகளில் மின்வட கம்பிகள், தரைக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், 34, 35, 36 ஆவது வட்டங்களில் மின்வடக் கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மேலே செல்கின்றன.

மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் அவசரச் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.  எனவே இந்த பகுதியின் 44-ஆவது வட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்த இடத்தில் புறநகர் அரசு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும். 

அடுக்குமாடி குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அனைத்தும் பழமையானவை. இந்தக் குடியிருப்புகள் 150 சதுர அடி முதல் 160 சதுர அடி கொண்டவை. இந்தக் குடியிருப்புகளைக் குறைந்தது 420 சதுர அடி கொண்ட குடியிருப்புகளாகக் கட்டித் தர வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் இல்லாத குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 20 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்க வேண்டும்.

திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ஆர்.டி.சேகர்:  எனது பணிக்காலத்தில் அடிப்படை தேவைகளைப் பெரும்பாலும் பூர்த்தி செய்துள்ளேன். குறிப்பாக குடிநீர், கழிவுநீர் அகற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளேன். இந்த முறை வெற்றி பெற்ற பின்னர், நிலவும் சுகாதார சீர்கேடுகள் சரிசெய்யப்படும். குறிப்பாக தொகுதியில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையினருக்காக இடுகாடு அமைத்து கொடுக்கப்படும். தொகுதியில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனை கட்டித்தரப்படும். கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்னை, கணேசபுரம் மேம்பாலம் உள்ளிட்டவை நிறைவேற்றித் தரப்படும். 

அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன்: நான் வெற்றி பெற்றால், இந்தத் தொகுதியில் நூலகம் அமைத்து தரப்படும். கொடுங்கையூரில் உள்ள நடுநிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி தரப்படும். பிளஸ் 2 வகுப்புக்குப் பின்னர்,  இடைநின்ற மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்படும். நீட், போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி மையங்கள் உருவாக்கித் தரப்படும். அம்பேத்கர் கலை கல்லூரியில் மேற்படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும். அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். மகளிருக்கு தனி உடற்பயிற்சிக்கூடம் அமைத்துக் கொடுக்கப்படும். 

மநீம வேட்பாளர் சு.ஆ.பொன்னுசாமி:  மத்திய சென்னையையும் வட சென்னையையும் இணைக்கும் வகையில் கணேசபுரம் மேம்பாலம் அமைத்து தரப்படும். மழைக்காலங்களில் வெள்ளநீர் பாதிப்பைத் தடுக்க மழைநீரை புவிக்குள் கொண்டு செல்லும் வகையில் மழைநீர் கிணறுகள் அமைத்து தரப்படும். கொடுங்கையூர் குப்பை மேட்டை இடம் மாற்றி, அந்த இடத்தில் ஒரு பகுதியில் மூலிகை தோட்டம், மற்றொரு பகுதியில் ஒருங்கிணைந்த காய்கறி, மலர் அங்காடி அமைத்து தரப்படும். இளைஞர்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், போதைப்பொருள் தடுப்பு தீவிரப்படுத்தப்படும். வியாசர்பாடியில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம் அமைத்து தரப்படும். பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்படும். 

சட்டப்பேரவைத் தேர்தல் 2016 வேட்பாளர் வாக்குகள்
பி.வெற்றிவேல் (அதிமுக)  -  79,974
என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணி ) - 79,455
அ.செளந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ. மநகூ)  - 10,281
ஆர்.பிரகாஷ் (பாஜக)  - 4,582
எம்.வெங்கடேஷ் பெருமாள் (பாமக) - 3,685

2019  இடைத்தேர்தல் முடிவுகள் வேட்பாளர் வாக்குகள்
ஆர்.டி.சேகர் (திமுக)  - 1,06,394
ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)  - 38,371
வி.பிரியதர்ஷினி (மநீம) - 20,508
மெர்லின் சுகந்தி (நாம் தமிழர் கட்சி)  -  8,611
வெற்றிவேல் (அமமுக)  -  8,281 

2021 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள்
ஆர்.டி.சேகர் (திமுக)
என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி - அதிமுக கூட்டணி )
லக்ஷ்மிநாராயணன் (அமமுக)
பொன்னுசாமி சு.ஆ (மநீம)
மெர்லின் சுகந்தி (நாம் தமிழர் கட்சி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.