ஆடிப்பெருக்கு : பக்தர்களின்றி களையிழந்த பவானி கூடுதுறை

ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் மூடப்பட்டதாலும், கோயில் வளாகம் செவ்வாய்க்கிழமை களையிழந்து காணப்பட்டது.
ஆடிப்பெருக்கு : பக்தர்களின்றி களையிழந்த பவானி கூடுதுறை
ஆடிப்பெருக்கு : பக்தர்களின்றி களையிழந்த பவானி கூடுதுறை


பவானி: ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் மூடப்பட்டதாலும், கோயில் வளாகம் செவ்வாய்க்கிழமை களையிழந்து காணப்பட்டது.

காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில், கூடுதுறையில் புனித நீராடி, இறைவனை வழிபட ஏராளமானோர் திரண்டு வருவதால், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

புகழ்பெற்ற பரிகாரத் தலமான கூடுதுறையில் பரிகாரத்துக்கு வரும் பக்தர்களால் பரிகார மண்டபங்கள் நிரம்பி, படித்துறைகள், நடைபாதைகளிலும் அமர்ந்து பரிகார பூஜைகள் நடத்தப்படும். மேலும், திருமணத் தடை, தோஷ நிவர்த்தி பரிகாரம் மற்றும் மூத்தோர் வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறும். குடும்பத்துடன் வரும் பெண்கள் புதிதாக மஞ்சள் தாலிக் கயிறு மாற்றிக் கொள்வர்.

புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடுகளில் ஈடுபடுவர். விவசாயம் செழிக்க காவிரி தாய்க்கு காய்கள், கனிகள், தானியங்களைப் படைத்து படித்துறைகளில் வழிபாடும் நடத்தப்படும். இதற்காக, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வாகனங்களிலும், பேருந்துகளிலும் வந்து கூடுவர். பக்தர்களின் நடமாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

கரோனா பரவல் அதிகரிப்பால் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், நீர்நிலைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில் நுழைவாயில்கள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோயில் வளாகப் பகுதிக்கு வருவதைத் தடுக்க நுழைவாயில்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

காவிரி ஆற்றுக்குச் செல்லும் படித்துறைகளும் மூடப்பட்டது. பவானி கூடுதுறையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஆடிபெருக்கு விழா கரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்து காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com