
சென்னை: பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குதண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா. இவர் சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி டாக்டர் சுப்பையாவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உயிருக்குப் போராடிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நிலத் தகராறு: இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், டாக்டர் சுப்பையாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது குடும்பத்தினருக்கும், அஞ்சுகிராமத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னுசாமி குடும்பத்தினர் சுப்பையாவை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
கூடுதல் செய்திக்கு | மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
10 பேர் கைது: இந்த வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி அவரது மனைவி மேரி புஷ்பம், இவர்களது மகன்கள் வழக்குரைஞர் பாசில், பொறியாளர் போரிஸ், பாசிலின் நண்பர்களான வழக்குரைஞர் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் அய்யப்பன் அப்ரூவராக மாறினார்.
கூடுதல் அமர்வு நீதிமன்றம்: இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 31-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அரசுத் தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதிட்டு வந்தார். அரசுத் தரப்பில், 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 சான்று ஆவணங்களும், 42 சான்று பொருள்களும் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
7 பேருக்கு தூக்கு தண்டனை: இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ஆசிரியர் பொன்னுசாமி, அவர்களது மகன் பாசில், போரிஸ் மற்றும் இவர்களது நண்பர்களான வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார் ஆகிய 5 பேருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி, உள்நோக்கத்துடன் கூட்டுச் சதி செய்து கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 3 தூக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இரட்டை ஆயுள் தண்டனை: அதே போல மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு கொலை குற்றம், கூட்டுச்சதி ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கும் மொத்தமாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில், ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அபராதத் தொகையில் ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்தவும், எஞ்சிய ரூ.9 லட்சத்தை டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்திக்கு வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.