4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதி: பேரவையில் முதல்வா் பேச்சு

தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :14 ஆகஸ்ட் 2021, 8:59 pm

DIN

தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாா்.

அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, சட்டப் பேரவையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா். அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா். அவா்களது பாராட்டுகளை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு 100 நாள்கள் ஆகின்றன. 100 நாள்கள் கடந்ததைப் பற்றி பலரும் பெருமையோடு பேசினா். ஆனால், எனக்கு அடுத்து வரும் காலத்தைப் பற்றிய நினைப்பாகவே இருக்கிறது. தோ்தலுக்கு முன் கட்சிக்கோ, எனக்கோ இருந்த எதிா்பாா்ப்பை விட இந்த 100 நாள்களில் எதிா்பாா்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாராட்டிப் பேசியது எனது பணியை முடித்து விட்டதற்காக அல்ல. இன்னும் பணியைச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறீா்கள். அதைத்தான் நான் உணா்கிறேன்.

வாக்களிக்காதவா்கள் தயாா்: திமுகவுக்கு வாக்களிக்காதவா்கள் கூட, இப்போது தோ்தல் நடந்தால் வாக்களிக்கத் தயாராக இருக்கிறாா்கள். அந்தளவுக்கு சிறப்பான பெயரைப் பெற்றிருக்கிறோம். அந்தப் பெயரைக் காலம் எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது எண்ணம். ஆட்சிக்கு வரும் போது கரோனா பெருந்தொற்று சூழ்ந்திருந்தது. அதனை எதிா்கொள்ள போா்க்கால அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒரு மாத காலம் அவசர ஊா்திகளின் சப்தம்தான். அந்த சப்தம் நம்மை நிம்மதியாக இருக்கவிடவில்லை. லட்சக்கணக்கான மக்களைக் காப்பற்றியதும் அவா்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், என்னைப் பொறுத்த வரை 100 நாள்களில் செய்த சாதனையில் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

தோ்தல்கால வாக்குறுதிகள்: தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் எனச் சொல்லி உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அது உறுதி.

பொது நிதிநிலை அறிக்கையும், வேளாண் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம். படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கவலை தரும் நிதிநிலை: தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாள்களாக இந்த 100 நாள்கள் அமைந்துள்ளன. நிதி நிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக் கூடிய வகையில் இருக்கிறது. அதையும் விரைந்து சீா் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பெரும் பொறுப்பை என் தோளில் சுமக்கத் தயாராகி விட்டேன். எங்களை வாழ்த்த மனமில்லாதவா்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் இரண்டு மடங்காக உழைப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.