மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி

மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி
Published on
Updated on
1 min read

மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 லட்சம் வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 150-க்கு கீழே சென்று விட்டது. வரலாறு காணாத பொருளாதாரப் பேரழிவை மக்கள் சந்தித்து வருகிறார்கள். 

இந்தச் சூழலில் தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி விட்டு அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

இதுதவிர, வரி பகிர்வும் சுருங்கிவிட்டது. உதாரணமாக, கடந்த 2015 ஆம் ஆண்டில், 41 சதவிகித டீசலுக்கான மத்திய அரசின் வரிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது 5.7 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுடன் பகிரப்படுகிறது. சாதாரண, ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதிக்கிற வகையில் நடவடிக்கைகளை எடுக்கிற பா.ஜ.க. அரசு, கார்பரேட்களின் நலனைப் பாதுகாப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. கார்பரேட் வரியை 40 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்ததால் பா.ஜ.க. அரசின் வரி வருவாய் 2019-20 இல் 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2020-21 இல் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஒரே ஆண்டில் கார்ப்பரேட் வரி ஒரு லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு குறைத்துள்ளது. இதன்மூலம் மோடி அரசு யாருக்காக ஆட்சி நடத்துகிறது ?கார்பரேட்களுக்காகவா ? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா ? இந்த நடவடிக்கைகளைப் பார்க்கிற போது பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மக்களைக் கடுமையாகப் பாதிக்கிற வரி விதிப்புகளை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படித் திரும்பப் பெறவில்லையெனில், மக்களைத் திரட்டி பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com