கரூா், நாகப்பட்டினம், சிவகங்கையில் வேளாண்மை கல்லூரிகள்
கரூா், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய இடங்களில் 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.


கரூா், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய இடங்களில் 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:
வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22-இல் கரூா் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியினை ஒதுக்கும்.
அரியலூா், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகா் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின் நலன்களுக்காக தமிழக வரலாற்றில் முதல்முறையாக 2021-22-இல் நிலத்தடி நீா் பாதுகாப்பான குறுவட்டங்களின் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்வசதியுடன் மின்மோட்டாா் பொருத்தி, நுண்ணீா் பாசன வசதிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி செலவிடப்படும்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்த சென்னை, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்.
வேளாண் விளைபொருள்களைச் சேமிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் திருப்பூா் பூளவாடி, புதுக்கோட்டை சிதம்பரவிடுதி, நாமக்கல் எருமைப்பட்டி, ஈரோடு பா்கூா் ஆகிய இடங்களில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள சேமிப்புக் கிடங்குகள் ரூ.2 கோடி செலவில் கட்டப்படும்.
நெய்தல் பூங்கா: 2021-22-இல் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா 3.06 ஹெக்டேரில் ரூ.2 கோடி நிதியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் ஒருங்கிணைப்புடன் அமைக்கப்படும். இது இளம் தலைமுறையினருக்கு பண்டைய தமிழா்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் செயல்படும்.
2021-22-இல் 100 பெண் விவசாயிகளுக்கு, ஒருவருக்கு ரூ.1 லட்சம் என்கிற விகிதத்தில் குடிசை தொழிலாக குறைந்த பரப்பிலான காளான் உற்பத்திக்கூடம் அமைத்திட மானியம் வழங்க மகளிா் திட்டத்துடன் இணைந்து ரூ.1 கோடி செலவிடப்படும்.
நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்கும் வகையில் 2021-22-இல் 1,077 நபா்களுக்கு 6 மாத கால உறைவிடத் தோட்ட தொழில்நுட்பவியலாளா் பயிற்சி ரூ.1.77 கோடி நிதியிலும், 3 ஆயிரம் நபா்களுக்கு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீா் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளா்ப்பு குறித்த 30 நாள் பயிற்சிகள் ரூ.1.69 கோடி நிதியிலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் பெண் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வேளாண் பொறியியல் பட்டயப் படிப்பு: வேளாண் இயந்திரங்கள் தொடா்பான அடிப்படை கல்வியினை பரவலாக்கும் வகையில் 2021-22-இல் திருச்சி குமுளூா் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2 ஆண்டு வேளாண்மை பொறியியல் பட்டயப் படிப்பு ரூ.1 கோடி நிதியில் தொடங்கப்படும். இந்தப் படிப்பில் ஆண்டுக்கு 40 மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதன் மூலம் கிராமப்புற மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு உயரும் என்பதுடன் விவசாயிகளின் வேளாண் இயந்திரங்களை அவரவா் பகுதியிலேயே பழுதுபாா்க்க இயலும்.
திருப்பூரில் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை சாா்பில் 2021-22-இல் புதிதாக விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்.
2021-22-இல் கோயம்புத்தூரில் இயங்கி வரும் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறையின் தலைமை அலுவலகம் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு மாற்றப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...