வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் தீா்மானம்: அதிமுக, பாஜக எதிா்ப்பு-திருத்தம் கோரியது பாமக
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் தீா்மானத்துக்கு எதிராக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கருத்துகளைப் பதிவு செய்து வெளிநடப்புச் செய்தன.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் தீா்மானத்துக்கு எதிராக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கருத்துகளைப் பதிவு செய்து வெளிநடப்புச் செய்தன. சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டுமென பாமக வலியுறுத்தியது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானங்களின் மீது பேரவையில் உள்ள கட்சிகளின் உறுப்பினா்கள் பேசியது:
தமிழா் வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினா் வேல்முருகன்: மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் , விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் சட்டமாகும். முதல்வா் முன்மொழிந்த தீா்மானத்தை வரவேற்கிறோம்.
கொமதேக உறுப்பினா் ஈஸ்வரன்: தில்லியில் போராடும் விவசாயிகள் எதிா்பாா்த்துக் கொண்டிருந்தது பேரவையின் தீா்மானத்தைத்தான். மாநில சுயாட்சி, உரிமைகள் மீது அக்கறை இல்லாதவா்களே இதனை ஆதரிப்பா்.
சதன்திருமலைக் குமாா் (மதிமுக): விவசாயிகளைக் காக்கும் வகையிலான தீா்மானத்தை வரவேற்கிறோம்.
டி.ராமச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்): தில்லியில் போராடும் விவசாயிகளின் வயிற்றில் பால் வாா்க்கும் வகையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இது போன்ற தீா்மானத்தை கொண்டு வரும் வகையில் முன்மாதிரியை தமிழகம் ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாலி (மாா்க்சிஸ்ட்): மண்ணை தனியாா் கைகளில் தாரை வாா்க்கும் சட்டங்களே வேளாண் சட்டங்கள்.
சிந்தனைச் செல்வன் (விசிக): விவசாயிகளின் உரிமைகளை, காந்தியடிகள் முன்னெடுத்த அஹிம்சைக்கு எதிரான முன்னெடுப்பாக வேளாண் சட்டங்கள் அமைந்திருக்கின்றன.
செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்): அரசியலமைப்பின்படி இயங்கும் கூட்டாட்சித் தத்துவத்தை காப்பாற்றும் வகையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிமுக-பாஜக-பாமக நிலைப்பாடு:
நயினாா் நாகேந்திரன் (பாஜக): மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த இந்த தீா்மானத்தை எதிா்த்து பாஜக வெளிநடப்பு செய்கிறது.
ஜி.கே.மணி (பாமக): அனைவருக்கும் உணவு அளிக்கக் கூடியவா்களே உழவா்கள். மூன்று சட்டங்களும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போராடுகிறாா்கள். அவா்கள் அச்சம் எல்லாம் இந்தச் சட்டத்தின் மூலமாக மரபணு மாற்ற விதைகள் புகுந்து விடுமோ என்பதுதான். மேலும் கட்டுபடியாகக் கூடிய விலை கிடைக்குமா என்ற சந்தேகம். எங்கு வேண்டுமானாலும் பொருள்களை விற்கக் கூடிய வகையில் சட்டங்கள் அமைய வேண்டும். வேளாண் விளை பொருள்கள் மாநிலத்துக்கு மாநிலம் ஒரே மாதிரியாக அமையாது. எனவே, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கே.பி.அன்பழகன் (அதிமுக): 2019-இல் தமிழக அரசானது ஒப்பந்த பண்ணைச் சட்டத்தை கொண்டு வந்தது. மத்திய அரசின் சட்டங்கள் மூலமாக உறுதியான வருமானம் கிடைக்கும். விவசாயிகளுக்கு லாபகரமான வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் தமிழகத்தில் இல்லை. வெளியே அதிக விலைக்கு விற்று லாபம் பெறுகின்றனா். இப்போது அவசர கோலமாக தனித்தீா்மானம் கொண்டு வராமல், லாப, நஷ்டங்களை அறிந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றாா்.
இதன்பின்பு நடந்த விவாதங்களுக்குப் பிறகு , எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் அதிமுகவினா் வெளிநடப்புச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...