இரண்டு தாரக மந்திரங்களைக் கொண்டு செயலாற்றி வருகிறோம்; பி.கே. சேகர்பாபு

"இறைவன் சொத்து இறைவனுக்கே", "எதிலும் வெளிப்படைத்தன்மை" ஆகிய இரண்டையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்று  அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
இரண்டு தாரக மந்திரங்களைக் கொண்டு செயலாற்றி வருகிறோம்; பி.கே. சேகர்பாபு
இரண்டு தாரக மந்திரங்களைக் கொண்டு செயலாற்றி வருகிறோம்; பி.கே. சேகர்பாபு

சென்னை: "இறைவன் சொத்து இறைவனுக்கே", "எதிலும் வெளிப்படைத்தன்மை" ஆகிய இரண்டையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஆய்வுக்கு பின்பு கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று 17.12.2021 திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேசும்போது, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள திமுக அரசும், தமிழக முதல்வரும் தொடர்ந்து மக்களுக்கு நலன் தரும் பல்வேறு பணிகளை செயலாற்றி வருகின்றனர். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி "இறைவன் சொத்து இறைவனுக்கே", "எதிலும் வெளிப்படைத்தன்மை" ஆகிய இரண்டையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 7 மாதங்களாக நானும் ஆணையர் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 150 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு மேற்கொண்ட கோயில்களில் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், மற்ற கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் கருத்து கேட்டு வருகிறோம்.

இதுவரை திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள 551 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி  திருப்பணிகள் முடிவடைந்தவுடன் குடமுழுக்கு நடத்தப்படும்.
 
பிரசித்தி பெற்ற திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கவேண்டும், ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது ரூ. 8 கோடி செலவில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கருங்கல் திருப்பணியாக செய்தல், ரூ. 92 லட்சத்தில் இராஜகோபுரத்தின் முன்புறம் கருங்கல் மண்டபம் திருப்பணி, ரூ. 18 லட்சத்தில் இராஜகோபுரம் திருப்பணி, ரூ. 80 லட்சம் செலவில் பரிவார சன்னதிகள், விமானங்கள், பிரகார மண்டபம் திருப்பணி, ரூ. 50 லட்சம் செலவில் பிரகார மண்டபம் அறைகள், மேல்தளத்தில் பழுதடைந்துள்ள தட்டோடுகள் புதுப்பித்தல், ரூ. 40 லட்சம் செலவில் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்திலும், மூன்றாம் பிரகாரத்திலும் மரக்கதவுகள், பாதுகாப்பு தடுப்பு கிரில் அமைத்தல், ரூ. 60 லட்சம் செலவில் மூலவர் சன்னதி விமானம் திருப்பணி, ரூ. 10 லட்சம் செலவில் கருங்கல் சுவர், மேல்தளம் சுத்தம் செய்தல், ரூ. 20 லட்சம் செலவில் திருக்குளம் திருப்பணி, ரூ. 8 கோடி செலவில் திருக்கோயிலுக்கு வடக்கு புறம் பக்தர்கள் ஓய்வு கூடம் மற்றும் தங்கும் விடுதி கட்டுதல், ரூ. 94 லட்சம் செலவில் மேற்கு புறம் தேரோடும் வீதியில் கடைகள் கட்டுதல், ரூ. 1.20 கோடி செலவில் அன்னதான மண்டபம் மேல் தளம் கட்டுதல், ரூ.30 லட்சம் செலவில் பக்தர்களுக்கு முடி காணிக்கை செலுத்த புதிய மண்டபம் அமைத்தல்,  பெரிய மற்றும் சிறிய இரண்டு திருமண மண்டபங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல், கோசாலை, அன்னதானக் கூடம் விரிவுப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு  ஆகமொத்தம் ரூ. 25 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள 16 தங்கும் விடுதிகள் மற்றும் 12 காட்டேஜ்கள் ஆகியவற்றை நவீன முறையில் புதுப்பிக்கவும், கோயிலைச் சுற்றி நீரூற்றுடன் கூடிய கண்கவர் தோற்றத்துடன் வண்ணமிகு பூங்காக்கள் அமைத்திடவும், நுழைவு வாயிலில் உள்ள பழைய சிமெண்ட் கட்டிடத்தை இடித்து கல்லிலான புதிய கட்டிடம் கட்டவும், மற்றும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் பணிகள் இதன் மூலம் நடைபெற உள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகிற தை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான நிதியுதவி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து  உபயதாரர்கள் துணையுடன் பெறப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் துவக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளில் முடித்திட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளும் முடிவடையும் நேரத்தில் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய திருத்தலமாக இத்திருக்கோயில் நிச்சயம் அமைந்திடும்.

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து சட்டப்படி அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை, ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நிச்சயம் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது கொரோனா தொற்று நோயை அடுத்து ஒமைக்ரான் தொற்று நம்மை அச்சுறுத்தி வருகிறது . புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி அதற்கான முடிவினை அறிவிப்பார்கள்.

போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற அதிமுக முயற்சித்து வருகிறது. எந்தக் குறையுமே காண முடியாத நிலையில், பொதுமக்கள் மட்டுமல்ல எதிர் வரிசையில் உள்ள அனைத்து கட்சிகளும் பாராட்டுகின்ற அரசாக, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சிறப்பான ஆட்சியில், பூதக்கண்ணாடி வைத்து குறைகளை தேடி கண்டுபிடிக்க முயன்று அதில் தோற்று போய், தங்களை அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக் கொள்வதற்காக வேண்டுமென்றே போராட்டம் நடத்துகிறது அதிமுக. அந்தப் போராட்டத்தைக் கூட உரிய தேதியில் நடத்த முடியாமல் மூன்று வாய்தா வாங்கி நடத்தும் ஒரே கட்சி அதிமுக தான். இவர்களின் ஏமாற்று செயலை மக்கள் நிச்சயம் உணர்ந்திருக்கிறார்கள்.

முன்னதாக திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்கள் திருக்கோயிலை சுற்றி பார்வையிட்டு சுத்தமாக வைக்கவும், தேவையில்லாத பொருட்களை உடனே அகற்றவும், பொங்கல் வைக்கும் இடம், திருக்குளத்தை சுத்தமாக வைக்கவும், தொடர்ந்து கோயிலில் முன்புறம் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபரிகளிடம் மாற்று இடம் கொடுத்து விரைவில் கட்டிக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். தங்கும் விடுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், கோசாலை  பராமரிப்பு பணிகள் மிகவும் மோசமாக இருப்பதை அறிந்து தூய்மையாக வைக்கவும், சிறிய பெரிய திருமண மண்டபங்களை மணமக்கள் அறை, சமயலறை, உணவருந்தும் அறை, கழிப்பறை அகியவற்றை சுத்தமாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது ஆணையர் ஜெ.குமரகுருபரன் திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர்  லட்சுமணன், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர்  ஜெயராமன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com