தேசிய வாக்காளர் நாள்: சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

12-வது தேசிய வாக்காளர் தினம் வருகிற ஜனவரி மாதம் 25ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளானது,

1) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள்
2) கல்லூரி மாணவ, மாணவியர்கள்
3) பொதுமக்கள்
4)மாவட்ட அளவிலான  போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவியர்கள் என 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி, தூண்டுதல் இல்லாமல் வாக்களித்தல், வயது வந்தோர் வாக்காளராகப் பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் ஓவியப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற உள்ளது.

போட்டிகள் நடைபெறும் நாட்கள் குறித்து அந்தந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் 15 போட்டியாளர்களின் விவரங்கள்  மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் தலைமை தேர்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

மேலும், 18 வயது பூர்த்தியடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தவறிய மாணவ, மாணவியர்கள் ஆகியோர் “ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில் https://www.elections.tn.gov.in/SVEEP2022/Account/Login என்ற முகவரியில் நேரடியாக போட்டிகளில் பங்கு பெறலாம்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தவறிய 14 வயது முதல் 17 வயது வரை மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட இணையதளம் மூலமாக பங்கு பெறலாம்.

மாவட்ட அளவில் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் அனைத்தும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவு பெறும். சிறந்த போட்டியாளர்களின் விவரங்கள் ஜனவரி 31-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

எனவே, தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com