முதுபெரும் அரசியல் தலைவர் தா. பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த தலைவருமான தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88.
முதுபெரும் அரசியல் தலைவர் தா. பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
முதுபெரும் அரசியல் தலைவர் தா. பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
Published on
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த தலைவருமான தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தா.பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கும் இரங்கலில், தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.  அவரது மறைவு  ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது.  

அவருக்கு எமது வீரவணக்கம் என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் செய்தியில், நாடு போற்றிய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான ஜீவா அவர்களின் அன்பைப் பெற்றவரான  தா.பாண்டியன், இளம் வயதிலிருந்தே பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள், அந்தப் பணியை துறந்துவிட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஜீவா அவர்கள் உருவாக்கிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகவும், பின்னாளில் ஜனசக்தி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். கடந்த பல ஆண்டுகளாகவே  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில்  ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று கூறியுள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com