வெறுப்பின் தூதர்களாக பாஜக தலைவர்கள்: பிருந்தா காரத்

பாஜக தலைவர்கள் வெறுப்பின் தூதர்களாக உள்ளனர் என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
வெறுப்பின் தூதர்களாக பாஜக தலைவர்கள்: பிருந்தா காரத்
Published on
Updated on
2 min read

பாஜக தலைவர்கள் வெறுப்பின் தூதர்களாக உள்ளனர் என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

இதுகுறித்து திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்  மேலும் கூறியது: 

தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட போவது உறுதி. பாஜக அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும். நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை எல்லா வகையிலும் மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. நாட்டின் எல்லையோரங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, புது தில்லி எல்லைக்குள் விவசாயிகளை வர விடாமல் தடுப்பதில் தற்போதைய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. எந்த சட்டமாக இருந்தாலும் கலந்து பேசிய பின்னர் கொண்டு வாருங்கள் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதில் தவறேதும் இல்லை. பட்ஜெட் போடுவதற்கு முன் அது தொடர்புடைய அனைத்து துறையிலும் கலந்து பேசும் அரசு விவசாயிகளிடம் மட்டும் பேசுவதில்லை. ஏன்?

இந்த விஷயத்தில் அதிமுக அரசு கடந்த மூன்று மாதங்களாக வாய் திறக்காமல் உள்ளது. மத்திய அரசிற்கு எதிராக இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் இருப்பது வெட்கக் கேடானது. குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் விவசாயிகளால் பயன்பெற முடியாது.

கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் 34.5 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு கடந்த ஆண்டு மிக மோசமாக உள்ளது சராசரியாக 45 நாள்கள் மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். அதுவும் தினக்கூலியாக சராசரி 191 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஊரக மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது. இத்திட்டத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

கரோனா காரணமாக நாட்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 2.88 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன இவற்றை நிரப்ப மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசிற்கு அடிமையாக உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து திமுகவுடன் ஒரு வலுவான கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம். இது நிச்சயம் வெற்றி பெறும். 

நாட்டின் கலாசாரம் ஜனநாயகம் ஆகியவற்றை சீரழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. மத்தியிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய பாஜக தலைவர்கள் வெறுப்பின் தூதுவர்களாக இருக்கிறார்கள். இங்கு வந்து பிரிவினையைப் பேசுகிறார்கள். பன்முகத்தன்மை கொண்ட நம்நாட்டை ஒருமுகத் தன்மையுடன் கூடிய நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.

சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும் காரணமாக பெட்ரோல் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மக்களிடம்  பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்ப உள்ளது. இதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com