கரும்பை அறிமுகம் செய்தவர்கள் தமிழர்

'கரும்பு' பற்றி பன்னெடுங் காலத்திற்கும் முன்பாகவே குறிப்புகள் இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
கரும்பை அறிமுகம் செய்தவர்கள் தமிழர்
கரும்பை அறிமுகம் செய்தவர்கள் தமிழர்
Updated on
1 min read

'கரும்பு' பற்றி பன்னெடுங் காலத்திற்கும் முன்பாகவே குறிப்புகள் இருந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலத்துள் உழவர்கள் சமுதாயம் அதிகம் இருக்கப் பெற்றது மருத நிலத்தில்தான். இங்கு நெல், வாழை, கரும்பு முதலிய பயிர்கள் முதன்மையானதாக விளைவிக்கப்பட்டன.

இதனை, "கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளுர்" (அகம். 256:15) என்ற பாடலடி சுட்டுகிறது.

மேலும், இயந்திரப் பொறிகள் மூலம் கரும்பிலிருந்து சாறு பிழிந்துள்ளனர். அவ்வாறு கரும்புச் சாற்றினை எடுக்கும்போது இயந்திரத்திலிருந்து வெளிப்படும் ஒலியானது யானை பிளிரும் ஒலியோடு ஒத்திருந்தது என்பதை ஓரம்போகியார், 

"கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்" (ஐங். 55:1) என்று காட்சிப்படுத்துகிறார். இன்றைக்கும் கரும்பிலிருக்கும் சாற்றினை எடுக்க இயந்திரப் பொறிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

கரும்பு ஓராண்டு காலப் பயிராகும். செங்கரும்பு, கருப்புக் கரும்பு, ஆலைக்கரும்பு என இதன் வகைப்பாடுகள் பல இருப்பினும், நாம் பொங்கலுக்குச் செங்கரும்பினையும், கருப்புக் கரும்பினையும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இன்றைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் பொருள்களில் தவிர்க்க முடியாத ஒன்று சர்க்கரை. "கியூபா' எனும் நாடு "உலகின் சர்க்கரைக் கிண்ணம்' எனவும் அழைக்கப்படுகிறது.

ஆனால், கரும்பினை முதன்முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் தகடூர் அதியமானின் முன்னோர்கள்தான் என்பதை ஒளவையார், 
"அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி"
 (புறம். 99:1-3) என்றும்,

"அரும்பெறல் அமிழ்த மன்ன
கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே"
 (புறம். 392: 25-26)
என்றும் உணர்த்துகிறார். 

ஒளவையின் இக்கூற்று, தமிழரின் பெருமையைப் பறைசாற்றுவதாய் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com