வாழப்பாடி அருகே ருசிகரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஒரு தனியார் ஹோட்டல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்துள்ளது.
பரோட்டா உண்ணும் போட்டி குறித்து தனியார் ஹோட்டல் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்.
பரோட்டா உண்ணும் போட்டி குறித்து தனியார் ஹோட்டல் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில், வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல,  ஒரு தனியார் ஹோட்டல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு பதிவு செய்து வருகின்றனர்.

உணவுப் பண்டங்களில் அண்மைக்காலமாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்றாக பரோட்டா இடம் பெற்றுள்ளது.

பரோட்டா தயாரிப்பதற்கான மைதா மாவை சுத்திகரிக்க பயன்படுத்தும்  ரசாயன பொருட்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், பரோட்டா உண்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் பரோட்டாவை விரும்பி உண்கின்றனர்.
சாலையோர கையேந்தி பவன்கள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை, அனைத்து உணவகங்களிலும், சிற்றுண்டி சாலைகளிலும் மற்ற உணவுப் பொருட்களை விட பரோட்டா விற்பனை பரவலாக அதிகரித்து வருகிறது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் தோசை கார்னர் என்ற பெயரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே புதிய ஹோட்டல் கடை ஒன்றை, ஆட்டோ செல்வம் என்பவர் திறந்துள்ளார்.

தனது ஹோட்டல் கடையை  பிரபலப்படுத்துவதற்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்துள்ளார்.

இந்த போட்டி குறித்து நோட்டீஸ் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் பரோட்டா போட்டியில் பங்கு கொள்ள விரும்புவர்கள் பெயரை முன்பதிவு செய்து, டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை பரோட்டா உண்ணும்  போட்டி நடைபெறும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நிமிடத்திற்குள் 15 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில்  தோல்வியுற்றவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, இப்போட்டியில் நிகழும் எவ்வித அசம்பாவிதங்களும் ஹோட்டல் நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில்  ஹோட்டல் கடை நடத்தும் பரோடா உண்ணும் போட்டியில் நடிகர் சூரி கலந்து கொள்ளும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த நகைச்சுவை  காட்சி,  படம் வெளியான தருணத்தில் பல்வேறு தரப்பின் கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த காட்சியை போல, வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில்  ஒரு தனியார் ஹோட்டலில் பரோட்டா உண்ணும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுவது, இப்பகுதி இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரிடமும் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com