

பொங்கல் மனித உறவுகளை வலுப்படுத்தும் மனித நேயம் மிக்க பண்டிகை. பொங்கல் விழாவே சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாதான். இந்திரனுக்கு ‘போகன்' என்று பெயர் உண்டு. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிய வீட்டு வாசலில் தேவையில்லாத பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவார்கள். வாயிலை பசுஞ்சாணம் கொண்டு சுத்தம் செய்து, ஆவாரம்பூவும் பூளைப்பூவும் வீட்டின் முன்புறம் சொருகி அழகான கோலம் போடப்படும். வீட்டின் நிலைக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி பொங்கலை வரவேற்க 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். இல்லுறை தெய்வத்தை வணங்கி போளி, வடை, பாயசம் போன்றவை படைக்கப்படும். சிறுவர்கள் போகித்தட்டு கொட்டி மகிழ்ச்சியைக் காட்டுவர்.
பொங்கலன்று சூரியவிழா எனப்படும் சூரியனை நாராயணராகக் கருதி ”சூரியநாராயணபூஜை” செய்கின்றனர். அன்று பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள். உழவையும் மனித உயிர்களையும் காக்கும் கடவுளான சூரியனுக்கு புதுப்பாணையில் பாலூற்றி புத்தரிசி வெல்லமிட்டு பொங்கச் செய்து ”பொங்கலோப்பொங்கல்” எனக்கூவி பொங்கி சூரியனுக்குப் படைப்பார்கள்.
தைமாதம் இரண்டாம்நாள் கனுப்பொங்கல் அன்று சுமங்கலி, கன்னி மற்றும் கன்யா பெண்கள் தமக்கருகிலுள்ள, சக்தியின் வடிவமாகத் திகழும் தம்மை விடவயதில் மூத்த சுமங்கலிகள் மற்றும் கன்யா பெண்கள் கையால் நெற்றியில் பசுமஞ்சள் கிழங்கால் நெற்றியில் கீறி விடச்சொல்வார்கள்.
” மஞ்சள் கீறிக்கொள்ளும் பெண்ணே! நீ தாயோடும், தந்தையோடும், சீரோடும் சிறப்போடும், பேரோடும், புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் உரிய வயதில் தாலிகட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று உன்னை கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி போலத் தொங்கத்தொங்கத்தாலிகட்டித்
தொட்டிலும், பிள்ளையுமாக,
மாமியார் மாமனார் மெச்ச,
நாத்தியும் மாமியும் போற்ற
பிறந்தகத்தோர், பெருமை விளங்கப்
பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோட புத்தாடை
புது மலர் சூடி புது மாப்பிள்ளை மருமகளோடு
புது புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி
என்றென்றும் இனிமையாக வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு, இருக்கணும்” என்று சொல்லி வாழ்த்துவர்.
பின்னர் சகோதரர்களிடம் மஞ்சள் கீறிக்கொள்வர். அவ்வமயம் கனுப்பொடி என தங்கைகள் அக்காக்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற கனுபொடியை பணம், நகை அல்லது ஏதோ ஒரு பொருளை தனக்காக தன்குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் சகோதரிகளுக்குக் கொடுப்பர். நல்ல வார்த்தைகளை ஆசீர்வாதமாக கூறிக்கொண்டே பசு மஞ்சளை நெற்றில் கீற்றி விடுவார்கள்.
பின்பு வீட்டிற்கு வந்து தங்களோடு வாழும் காகத்துக்கும் பறவைகளுக்கும்,
காக்காய் பொடி வைத்தேன் கனுப்பொடி வைத்தேன்,
காக்காய்க்கு எல்லாம் கல்யாணம்
குருவிக்கெல்லாம் கொண்டாட்டம்
காக்காய் கூட்டம் பிரிந்தாலும்,
என் கூட்டம் பிரியாது இருக்கணும்”
“கணுப் பிடி வெச்சேன் காக்காப் பிடி வெச்சேன்
கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்
மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்
வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்
எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்
கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்
தூப தீபம் காட்டி வெச்சேன்
தூய மனதோடு நானும் வெச்சேன்
கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கடவுளை வணங்கி வெச்சேன்
ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்
கணுப் பிடி வெச்சேன் “என்று வேண்டிக்கொண்டு கனுப் பண்டிகை பாடல் பாடிக்கொண்டு ஆரத்தி எடுப்பர்கள்.
அன்றே விவசாயத்தொழில் குடும்பங்களில் மாட்டுப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் கொண்டாடப்படும். பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்
தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி. கழுத்தில் சலங்கை மணி கட்டி மாலைகள் போட்டு குங்குமமிட்டு புதிய மூக்கணாங் கயிறு, அணிவிப்பார்கள்கள்.
உழவுக் கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை எல்லாம் கொண்டு தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
அடுத்த நாள் காணும் பொங்கலன்று தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப வீடுகளில் கொண்டாடப்பெறும் பொங்கல் திருநாள்கள் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றியிருக்கும் பண்பாட்டுத் திருநாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.