ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ஹென்றி டிபேன், தேவசகாயத்திடம் அடுத்த கட்ட விசாரணை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 28ஆம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு, சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன், ஐஏஎஸ் தேவசகாயம் உள்ளிட்டோரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த உள்ளதாக ஆணைய வழக்குரைஞர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் இதுவரை 1153 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுவரை 718 பேர் சாட்சி கூறியுள்ளனர், 813 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 2 காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் விசாரணை ஆணையத்தில் காவல் கண்காணிப்பாளர், ஐஜி, டிஐஜி உள்ளிட்ட சுமார் 300 பேருக்கும் மேல் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த 28ஆம் கட்ட விசாரணையில் மட்டும் ஆட்சியர் அலுவலகம் விவிடி சிக்னல் மாதா கோயில் போன்ற இடங்களில் போராட்டம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சருக்கு ஆணையம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என ஆணைய வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.