

தமிழ்மொழிக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது, “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். எனத் தெரிவித்துள்ளார்.
செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் மொழி வளர்ச்சிக்கென நாம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் “ஹிந்தி ஒழிக என முழக்கமிடுவதோடு நம் கடமை முடிந்துவிடவில்லை. 'தமிழ் வாழ்க' என உரக்கச் சொல்ல வேண்டும். சொல்வதோடு நிறுத்தி விடக் கூடாது, செயலிலும் காட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
திராவிடத் தலைவர்களால் ஹிந்தி எதிர்ப்பாளனானேன் எனத் தெரிவித்துள்ள கமல், உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழைக் கற்றுக்கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டமோ, தேர்வு முறையோ, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழோ கொண்ட ஒரு படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நம் மொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் தாக்குதல்களும், திணிப்புகளும் நிகழ்கிற காலகட்டத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.