
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கண்மாய் நீர்ப்பாசனத்தையும் நிலத்தடி நீராதாரத்தையும் பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை பெரியகண்மாய் நீரை நம்பி அப்பகுதியை அடுத்துள்ள ராமசாமிபுரம், வடுகர்கோட்டை, மலையரசன்கோவில், சுக்கிலநத்தம், கஞ்சநாயக்கன்பட்டி, தெற்குத்தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக கால்நடைத் தீவனப் பயிர்கள், நாட்டு வெண்டைக்காய், நெல், உளுந்து, வெள்ளரி உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் இக்கண்மாய் நீரை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்வதால் பெருமளவு நீரை உறிஞ்சிவிடுவதாகவும் பாசனத்திற்கான நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் மேலும் நிலத்தடி நீராதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது தொடர்பாக, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
எனவே தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாகவும், நிலத்தடி நீராதாரத்தைக் காக்கும் விதமாகவும் விரைவில் ஆகாயத்தாமரைகளை அகற்றிட அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.