டெங்குக் காய்ச்சலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

கொசுக்களை ஒழிக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெங்குக் காய்ச்சலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சி
டெங்குக் காய்ச்சலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சி
Published on
Updated on
1 min read


பொது மக்கள் தங்களின் வீடுகளில் தண்ணீர் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி கொசுக்களை ஒழிக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் டெங்குக்காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 1262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2359 ஒப்பந்த பணியாளர்களும் என மொத்தம் 3621 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேலும், டெங்கு தடுப்பு பணியில் 6000 காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களும் (FSW) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்குட்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப்புழு வளரிடங்களான மேல்நிலை/கீழ்நிலை தொட்டி, கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களை கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 256 கைத்தெளிப்பான்கள் மற்றும் 167 அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப்பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்தவெளி கால்வாய்களிலும் கொசுப்புழு அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டு, கொசுப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்பூஃசியா என்னும் மீன்கள் விடப்பட்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வாகனத்தில் எடுத்துச்செல்லும் 68 புகைப்பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச்செல்லும் 287 புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகைப்பரப்பும் இயந்திரங்களை கொண்டு முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ட்ரோன் மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைத்துள்ள தண்ணீரை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com