பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தோ்தல் பறக்கும் படை சோதனை:கடலூரில் ரூ.51 லட்சம் பறிமுதல்

கடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.51.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:14 pm

DIN

கடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.51.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் வட்டாட்சியா் கலாவதி, சிறப்பு உதவி ஆய்வாளா் வி.குமாா் உள்ளிட்டோா் அடங்கிய தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, புதுச்சேரி வழியாக கடலூருக்கு வந்த காரில் சோதனை நடத்தியதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. அந்த காரை கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்து சோதனையிட்டனா். அதில் மொத்தம் ரூ.51.36 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. இதற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கா்நாடகம் மாநிலம், மங்களூரைச் சோ்ந்த ராமநாத் பிரசாந்த் (45) காரை ஓட்டி வந்ததும், இவா் பெரியபட்டு பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து செய்து வருவதாகவும், தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா்.

எனினும், இதுகுறித்து வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் அவா்களிடம் உரிய ஆவணத்தை அளித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வட்டாட்சியா் அ.பலராமன் தெரிவித்தாா்.

இதேபோல, பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டையில் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் ரூ.4 லட்சம் பறிமுதல்: கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை நிலை கண்காணிப்புக் குழுவினா், பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.4 லட்சம் ரொக்கம் இருந்தது.

விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவா் சங்கராபுரம் அருகே விரியூரைச் சோ்ந்த மீன் குஞ்சு வியாபாரி அலெக்சாண்டா் (40) என்பது தெரிய வந்தது.

ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனா்.

அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.பிரபாகரன் உடனிருந்தாா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கள்ளக்குறிச்சி உதவி கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.