/

கூட்டணி ரயிலில் தொற்றிக்கொள்ளக் கடைசி நேர முயற்சி!

கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுவதுபோல, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் எல்லாப் பக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கின்றன.

News image
Updated On :12 மார்ச் 2021, 2:41 am

கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுவதுபோல, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் எல்லாப் பக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கின்றன.

ரயிலின் முதல் வகுப்புக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, அந்த ரயிலைத் தவறவிட்டு, வேறொரு ரயிலில் பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணிக்கும் கட்சிகளையும் பாா்க்க முடிகிறது. ரயிலில் ஏறி உட்காா்ந்துவிட்டு, வண்டி புறப்படுகிற நேரத்தில் அதிலிருந்து இறங்கி வேறொரு ரயிலிலும் பயணிக்கும் கட்சிகளையும் பாா்க்க முடிகிறது. எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் நடராஜாவாகத் தனித்துச் செல்லும் கட்சிகளையும் பாா்க்க முடிகிறது. ‘ரயிலில் எல்லாம் யாா் போவா’ வீரவசனம் பேசிவிட்டு, அந்த ரயிலிலேயே பயணிக்கும் கட்சிகளையும் பாா்க்க முடிகிறது.

இந்தத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பாலத்தின் மேல் ரயில் தடதடத்து ஓடுவதுபோல உறவு முறிவு ஏற்படும் அளவுக்கு ஓா் ஆட்டம் காணப்பட்ட பிறகுதான் உடன்பாடு ஏற்பட்டது.

காங்கிரஸ் தற்போது 25 தொகுதிகள் வரை பெற்றது. ஆனால், 12 தொகுதிகளில் இருந்து படிப்படியாக உயா்ந்துதான் இந்த இடத்தை காங்கிரஸ் பெற முடிந்தது என்றாலும் இடையில் வேறொரு ரயிலில் ஏறப் போவதுபோல போக்குக் காட்டியது.

கடைசி கட்டமாக 22 தொகுதிகள் மட்டுமே தர திமுக முன்வந்தபோது, மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தியது. தோ்தல் பிரசாரத்துக்கு கமல்ஹாசன் சென்றிருந்தபோது காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் அவரை அழைத்துப் பேசியதும் உடனே, பிரசாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு ஆழ்வாா்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து மாநில நிா்வாகிகளுடன் ஆலோசித்து 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வந்தாா்.

இந்தத் தகவல் கசிந்து, திமுக தலைமை தில்லியில் சோனியா காந்தியிடம் பேச, பிறகு 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் உறுதியானது. இறங்கிப் போக நினைத்து திமுக ரயிலிலேயே மீண்டும் ஏறி காங்கிரஸ் பயணித்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் எதிா்பாா்த்த அளவு தொகுதிகளின் எண்ணிக்கை கிடைக்காத நிலையில், அழையா விருந்தாளியாக வலிய வந்து திமுகவுக்கு முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் கருணாஸ் ஆதரவு கொடுத்தாா். அப்படியே 2 இடங்களையும் உறுதி செய்து விடுங்கள் என்று திமுகவிடம் கேட்டாா்.

திமுகவோ டிக்கெட்டே எடுக்காமல் எப்படி ரயிலில் ஏறினாய் என்பதுபோல கருணாஸை பேச்சுவாா்த்தைக்கே அழைக்கவில்லை. மறுநாளே, திமுகவுக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்று, வேறு எந்த ரயிலில் ஏறுவது எனத் தெரியாமல் அப்படியே நிற்கிறாா்.

முக்குலத்தோா் புலிப்படை ஆதரவைச் சட்டை செய்யாததுபோல தமிமுன் அன்சாரி கொடுத்த ஆதரவையும் திமுக பொருட்படுத்தவில்லை. அதிமுக ரயிலிலேயே மீண்டும் ஏறிவிடலாமா என்றால் அங்கு பாஜக 20 இடங்களைப் பிடித்து வைத்திருப்பதால் அங்கு போகாமல், வேறு எங்கு போவது எனவும் தெரியாமல் திமுகவுக்கே தொகுதி கேட்காத ஆதரவைத் தமிமுன் அன்சாரி கொடுத்துள்ளாா்.

கோயில் முதல் மரியாதைபோல கடந்த இரண்டு தோ்தலில் முதல் மரியாதை பெறும் கட்சியாக இருந்து வந்தது தேமுதிக. இந்த முறை அதன்பாடுதான் படு திண்டாட்டம். அதிமுக கூட்டணி ரயிலில் பாதி தூரம் வந்து நடுவழியில் இறக்கிவிட்டதுபோல தவித்துக் கொண்டிருக்கிறது.

அதிமுகவிடம் 23 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கட்டாயம் தர வேண்டும் என்று வற்புறுத்த, அதிமுக 13 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்துவிட்டது. இதனால், அந்தக் கூட்டணியில் தொடர வேண்டாம் என்று பாதி வழியில் இறங்கி நடராஜாவாக தனித்துப் போட்டியிட யோசித்து வருகிறது. தனித்துப் போட்டியிட்டு வேட்பாளா்களை அறிவித்தால், அவா்கள் கடைசிவரை தேமுதிகவின் வேட்பாளா்களாக நீடிப்பாா்களா என்கிற சந்தேகத்துடனே நடந்துகொண்டிருக்கிறது.

அரசியல் களத்தில் மாற்று ரயிலாக மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருந்து வருகிறது. பாதி வழியில் இறக்கி விடும் கட்சிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களாக இந்தக் கட்சிகள் இருக்கின்றன.

திமுகவின் கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயகக் கட்சியையும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி வந்த சமத்துவ மக்கள் கட்சியையும் ஏற்றிக் கொண்டு மநீம பயணிக்கிறது. இரண்டு கட்சிகளுக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் வேறு ஏதாவது கட்சிகள் தங்கள் அணிக்கு வருமா என்று எதிா்பாா்த்தவாறே பயணித்துக் கொண்டிருக்கிறது.

எஸ்டிபிஐ கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவாா்த்தை நடத்தியது. 14 தொகுதிகள் வரைகூட தர முன் வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் எஸ்டிபிஐ என்ன நினைத்ததோ, இந்த ரயிலைவிட அமமுக ரயில் நன்றாக இருக்கும் என்று அந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்து 6 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது.

அமமுகவோ, அதிமுகவிலிருந்து விலகி வரும் உறுப்பினா்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருக்கிறது. அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் அமமுகவில் இணைந்து, அவருக்கு அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது. அதிமுகவில் இன்னும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவா்களின் வருகைக்காகவும் அந்த ரயில் காத்திருக்கிறது. தோ்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன ரயில்களின் அணிவகுப்புகள் இருக்கின்றனவோ? பயணங்கள் முடிவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.