தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக அமைச்சர்கள் ஊழலில்தான் வெற்றி நடை போடுகிறார்கள்: கனிமொழி

அதிமுக அமைச்சர்கள் ஊழலில் வெற்றி நடை போடுகிறார்கள் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

News image

திமுக வேட்பாளர் எம். பிரபாகரனை ஆதரித்து பேசுகிறார் மக்களவை உறுப்பினர் கனிமொழி.

Updated On :24 மார்ச் 2021, 11:40 am

DIN

பெரம்பலூர்: அதிமுக அமைச்சர்கள் ஊழலில் வெற்றி நடை போடுகிறார்கள் என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம். பிரபாகரன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரை ஆதரித்து, கீழப்புலியூர் கிராமத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கனிமொழி பேசியது:

திமுக வேட்பாளர்கள் மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள். 23 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால், அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான ஆட்சியா அல்லது காழ்ப்புணர்ச்சியில் நடத்தப்படும் ஆட்சியா? 

அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மைக் பிடித்து பேசும்போது சாபம் விடத் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் பாஜக செய்யும் ஒரே விஷயம் பெரியார் சிலைகளை அவமதிப்பது மட்டுமே. பெரியார் என்பது ஒரு கருத்தியல், சித்தாந்தம், புரட்சி. பதவி வெறியால் தமிழகத்தின் பெருமையை தில்லியில் அடகு வைத்துவிட்டார்கள்.
தமிழகத்தில் நடைபெறுவது பிஜேபியின் பினாமி ஆட்சி. மத்தியில் நிகழும் தவறுகளை சுட்டுக்காட்டும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. ஒப்பந்தம் அனைத்தும் முதலமைச்சரின் உறவினர்களுக்கு மட்டுமே செல்கிறது. கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது.  

அதிமுக அமைச்சர்கள் ஊழலில் வெற்றி நடை போடுகிறார்கள். தமிழகத்தில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வட நாட்டினருக்கே தமிழகத்தில் அதிக வேலை வழங்கப்படுகிறது.  நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் கனவுகள் சிதைந்து போனதால் தற்கொலை செய்து கொண்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதிமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பொள்ளாட்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் கேள்வி கேட்டால் வழக்கு, இல்லையெனில் வன்முறை. பெண் காவல்துறை அதிகாரி புகார் அளிக்க வந்த போது தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

ரேஷன் கடைகளில் பெண்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரேஷன் கடை அரிசி தரமில்லாமலும், எடை குறைவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப், எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். விவசாயக் கடன், 5 சவரனுக்கு குறைவாக இருக்கும் நகைக் கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படுவதோடு, ரூ. 300 உதியம் வழங்கப்படும் என்றார் கனிமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.