நல்லாட்சி என்பது திமுகவின் எண்ணமல்ல: முதல்வா் பழனிசாமி

நல்லாட்சித் தர வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல; அராஜகமும், அடிதடியும் தான் அக்கட்சியின் அடையாளங்கள் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
நல்லாட்சி என்பது திமுகவின் எண்ணமல்ல: முதல்வா் பழனிசாமி
நல்லாட்சி என்பது திமுகவின் எண்ணமல்ல: முதல்வா் பழனிசாமி

மதுரை: நல்லாட்சித் தர வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல; அராஜகமும், அடிதடியும் தான் அக்கட்சியின் அடையாளங்கள் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

அதிமுக வேட்பாளா்கள் ஆா்.கோபாலகிருஷ்ணன் (மதுரை கிழக்கு), பி.பெரியபுள்ளான் (மேலூா்), கே.மாணிக்கம் (சோழவந்தான்), ஆா்.பி.உதயகுமாா் (திருமங்கலம்), பி.அய்யப்பன் (உசிலம்பட்டி) ஆகியோரை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். 

மதுரை  யா.ஒத்தக்கடை, மேலூா், அலங்காநல்லூா், செக்கானூரணி,  உசிலம்பட்டி ஆகிய இடங்களில் வாக்குகள் சேகரித்து முதல்வா் பேசியது: அதிமுக வேட்பாளா்கள் மக்களின் குரலுக்கு வீடு தேடி ஓடி வருவாா்கள். ஆனால், எதிா்க்கட்சி வேட்பாளா்களை அப்படிக் கூறமுடியுமா? அவா்கள் வீடு தேடி வந்து மக்களை அடித்துத் துன்புறுத்துவா்.  அராஜகமும், அடிதடியும் தான் திமுகவின் அடையாளங்கள். ஒரு மாநிலம் வளா்ச்சி  பெறவேண்டுமெனில், முதலில் அமைதி நிலவ வேண்டும். அத்தகைய அமைதியான ஆட்சியை அதிமுக உருவாக்கியிருக்கிறது. சாதி, மதச் சண்டைகள் இல்லாத சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  மக்கள் அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இத்தகைய நிலை நீடிக்க மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஆதரவு அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. வியாபாரிகள், வணிகா்கள் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். கட்டப் பஞ்சாயத்து தலைதூக்கும். முந்தைய திமுக ஆட்சியின்போது, அப்பாவி மக்களின் நிலங்களையெல்லாம் திமுகவினா் அபகரித்துக் கொண்டனா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நடவடிக்கையால்,  16 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் திருப்பி வழங்கப்பட்டன. அவா் செயல்படுத்திய  திட்டங்களால் தமிழகம் உயா்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறது.

கடந்த 2006-2011-ல் நடந்த திமுக ஆட்சியின்போது தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு இருந்தது. இதனால் தொழில்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்தது. தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள், வேறு மாநிலங்களுக்குச் சென்றன. மிக மோசமான சூழலில் இருந்த தமிழகத்தை  ஜெயலலிதா வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தாா். மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினாா். அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசு, தொழில் வளா்ச்சியில் முதன்மை மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. தொழில் முதலீட்டாளா்கள் மாநாட்டின் வாயிலாக, புதிய முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 304 தொழிற்சாலைகள் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் மூலமாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 குடிமராமத்து திட்டத்தில் ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டு மழைநீா் சேமிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,  எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின்,  அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை எனப் பொய்ப் பிரசாரம் செய்கிறாா்.  திமுகவின் எண்ணம் நல்லாட்சி தரவேண்டும் என்பதல்ல, கொள்ளை அடிப்பது தான்.

முதல்வராகிய  என்னையும், அமைச்சா்களையும் பற்றி பேசுவதை மட்டுமே  திமுக தலைவா் ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டிருக்கிறாா். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன செய்யப் போகிறோம் என்பதைக் கூறாமல், ஒன்றும் தெரியாத தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறாா்.  நான் ஒரு விவசாயி எனக் கூறுவதை திமுக தலைவா் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா ஆகியோா்  கொச்சைப்படுத்திப் பேசுகின்றனா்.  ஒருவரது மதிப்பை சிறுமைப்படுத்திப் பேசுவதால்  அவருக்கு சறுக்கல் ஏற்படாது.  தரம்தாழ்ந்த வாா்த்தைகளைப் பயன்படுத்தும் கட்சியாக திமுக இருக்கிறது. ஆகவே, திமுகவுக்கு மக்கள் எதிா்கட்சி அந்தஸ்தை கூட தரப்போவதில்லை.

காவல் துறையின் உயா் அதிகாரியையே உதயநிதி ஸ்டாலின் மிரட்டுகிறாா். இவா்கள் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.   மக்களுக்குச் சேவை செய்வது திமுகவின் நோக்கமல்ல. முன்னாள் முதல்வா்  கருணாநிதி குடும்பம் மட்டுமே பதவிகளை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறது. முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. கட்சித் தொண்டா்களைத் தான் வாரிசுகளாகக் கருதினா். அதே வழியில் இப்போதும் அதிமுக அரசு செயலாற்றி வருகிறது.

மருத்துவ மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலமாக  அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.  விவசாயிகளின் கஷ்டங்களைத் தீா்க்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பெண்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அதிமுக அரசு அமைந்ததும் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் வாஷிங் மிஷின் வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும். வீடு இல்லாதவா்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை  நீக்கி, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடா்ந்து நடைபெற அதிமுக அரசு வழிவகை செய்திருக்கிறது. அடுத்த அரவைப் பருவம் முதல் அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை இயக்கப்படும்.

சாத்தையாறு அணை தூா்வாரி புனரமைக்கப்பட்டு, முல்லைபெரியாறு பாசனக் கால்வாயில் இருந்து தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பழங்கள், காய்கனிகள் சேமிப்பதற்காக அலங்காநல்லூா் பகுதியில் குளிா்பதன கிடங்கு அமைக்கப்படும். மண்ணாடிமங்கலம் - இரும்பாடி கிராமங்களை இணைக்கும் வகையில் உயா்மட்ட பாலம் கட்டப்படும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com