பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்

நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை. அம்மன் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்
Published on
Updated on
2 min read


பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடைபெற்றது. பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். நோய் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை. அம்மன் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. பூசாரிகள் மற்றும் படைக்கலப்பூசாரிகள் என 11 பேர்  மட்டும் குண்டத்தில் இறங்கினார்கள். அதன் பிறகு அம்மன் தரிசத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதி பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் பண்ணாரியம்மன் கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டு பூசாரி மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகமும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதன்படி  திங்கள்கிழமை இரவு விழா கமிட்டியினர் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து  குண்டத்துக்கு தேவையான வேம்பு மற்றும் உஞ்சல் மரத்துண்டுகள் வைத்து தீக்குண்டம் ஏற்படுத்தினர்.  அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்குண்டம் சமப்படுத்தப்பட்டு பூசாரி இறங்குவதற்கேற்றவாறு அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை  அதிகாலை 4 மணிக்கு குண்டம்  விழாவையொட்டி லிங்கேஷ்வர் மற்றும் சருகு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த அம்மன் அழைப்பு நிகழ்ச்சியில் தொப்பகுளத்தில் இருந்து தலைமைபூசாரி ராஜேந்திரன் மேள தாளத்துடன் குண்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவி  குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து பிற பூசாரிகள் மற்றும் படைக்கலப்பூசாரிகள் என 10 பேர் இறங்கினர்.

அதன் பிறகு குண்டம் பகுதி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி பண்ணாரிஅம்மன் தங்க கவசம் அணிந்து மாணிக்க வீணையுடன் அருள்பாலித்தார். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி ரத்து செய்யப்பட்டதால்  பக்தர்கள் அம்மனை தரிசிக்க மட்டும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் நிற்பதை தவிர்க்க கோயில் முன்பு தகர ஷீட்டில் ஆன செட் அமைக்கப்பட்டு அதில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு நீண்ட வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com