பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே: மு.க. ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே: மு.க ஸ்டாலின்
பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே: மு.க ஸ்டாலின்


சென்னை: செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வராக மே 7-ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன. 

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மே 7-இல் முதல்வராகப் பதவியேற்கிறாா் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் மே-7 இல் முதல்வராகப் பதவியேற்க உள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

1967-இல் இருந்து தமிழகத்தை 5 முறை திமுக ஆட்சி செய்துள்ளது. 2011, 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் தொடா்ந்து அதிமுகவிடம் தோல்வியைத் தழுவி, திமுக 10 ஆண்டுகள் காத்திருந்து 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளாா்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் செவ்வாய்க்கிழமை (மே 4) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். கூட்டத்தில் சட்டப் பேரவை திமுக குழுவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். அதன்பின்னா், திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனா். அதைத் தொடா்ந்து மு.க.ஸ்டாலினை பதவியேற்க ஆளுநா் அழைப்பு விடுப்பாா்.

மே 7-இல் பதவியேற்பு: கரோனா தொற்றின் இரண்டாவது அலை உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை எளியமுறையில் நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையிலேயே அமைச்சரவைப் பதவியேற்பு மே-7-இல் நடைபெற உள்ளது. தேசியத் தலைவா்கள் எவரும் அழைக்கப்படாமல் குறுகிய நேரத்தில் விழாவை நடத்தி முடிக்க உள்ளனா். மு.க.ஸ்டாலின் உள்பட 30 போ் வரை அமைச்சா்களாகப் பதவியேற்பா் எனக் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் காவல்துறை உள்பட முக்கிய பொறுப்புகளை தனது வசம் எடுத்துகொள்ள உள்ளதாகவும், புதியவா்களுக்கும், இளைஞா்களுக்கும் அமைச்சரவையில் இடம்கொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமைச் செயலா் சந்திப்பு: இந்த நிலையில், ஆழ்வாா்பேட்டையில் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரை தமிழக அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது பதவியேற்பு விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com