தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுரைக்கு குழாய்வழி தண்ணீர்: லோயர்கேம்ப்பில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய ஆய்வு

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல மதுரை மாநகராட்சி அதிகாரிகள் லோயர் கேம்ப்பில் ஆய்வு செய்தனர். 

News image
Updated On :5 மே 2021, 11:44 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல இப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதன்கிழமை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் லோயர் கேம்ப்பிற்கு வந்தனர்.

அங்கு கம்பம் கூட்டுக்குடிநீர் தடுப்பணைக்கு மேல்பகுதியில் ஆய்வு நடத்தினர். 

முல்லைப் பெரியாற்று தண்ணீரை ரூபாய் 1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லும் சிறப்புத் திட்டம் அமைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாற்றின் தலை மதகான லோயர்கேம்ப்பில் தடுப்பணை கட்டி இரும்புக் குழாய்கள் பதித்து அதன் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 

இத்திட்டத்திற்கு, கம்பம் நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில், புதியதாக தடுப்பணை கட்டி தண்ணீர் கொண்டு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இத்திட்டத்தின்படி கோடைகாலங்களில் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் குறைந்த அளவு தண்ணீர் கம்பம் கூட்டுகுடிநீர் திட்ட தடுப்பணைக்கு வந்து சேராது.

மேலும் தேனி மாவட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

இதன் காரணமாக புதிய தடுப்பணை கட்ட இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை மதுரை மாநகராட்சி கட்டுமானப்பிரிவு பொறியாளர் உட்பட மூன்று பேர் கொண்ட குழு கம்பம் கூட்டுக்குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் தடுப்பணை கட்ட உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். 

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில் மீண்டும் அதிகாரிகள்  ஆய்வு செய்தது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரகசியமாக நடந்த இந்த ஆய்வின்போது குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் உடன் வரவில்லை. 

இதுகுறித்து குடிநீர் வடிகால்வாரிய உதவிப்பொறியாளர் ராஜேஷிடம் கேட்டபோது, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வருவது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை என்றார். 

இதுகுறித்து கூடலூர் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் புதுராஜா கூறுகையில், மதுரை மாநராட்சி ஆணையர் கூடலூரில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியபோது, மதுரைக்கு ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லும் இந்ததிட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆற்றில் போகும் தண்ணீரை குழாய் வழியாக எடுத்துச்சென்று விட்டால் நிலத்தடிநீர்மட்டம் குறையும். தேனி மாவட்டம் பாலைவனமாகும். இதை கருத்தில் கொண்டுதான், 1300 கோடி ரூபாய் வீணாக செலவழிப்பதை விடுத்து ரூ.120 கோடியில் வைகை அணையை தூர்வாரி 1.5 டிஎம்சி தண்ணீரை அதிகமாக சேமித்து அங்கிருந்து மதுரைக்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என்ற கருத்தை தெரிவித்தோம், அதுதான் சிறந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.