

கரூர்: கரூரில் புதன்கிழமை அதிகாலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் மற்றொரு மாணவரும் படுகாயமடைந்தார்.
கரூர் புலியூர் அடுத்த வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்கள் ஆகாஷ்(15), சுனில்(11) ஆகிய இருமகன்களுடன் தூங்கிக்கொண்டிருந்தார். ஆகாசும், சுனிலும் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆகாஸ் 10ஆம் வகுப்பும், சுனில் 6 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
இதையும் படிக்க | நாளை 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இரவு 1.40 மணியளவில் திடீரென வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சுவர் அருகே தூங்கிக்கொண்டிருந்த சுனில், ஆகாஷ் ஆகியோர் கட்டிட இடிபாடுக்குள் சிக்கினர்.
இதனிடையே ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியின் அழுகைகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றினர். ஆனால் இடிபாடுக்குள் சிக்கிய சுனில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தான். ஆகாசிற்கு இரு கைகளும் உடைந்திருந்தன.
இதையும் படிக்க | வான்மழையை வரமாக்குவோம்!
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூர் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சுனில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த ஆகாஷையும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து புதன்கிழமை காலை ஆறுமுகத்தின் உறவினர் புலியூர் பேரூராட்சி அலுவலகம் அருகே திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூர் நகர காவல் துணைக்கண்காணிப்பாளர் தேவராஜ், கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு அரசின் நிவாரணத்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் சிறிதுநேரம் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூரில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்துவருவதால் மண் சுவரால் கட்டப்பட்ட ஆறுமுகத்தின் வீட்டின் சுவர் ஈரமாக இருந்ததாகவும், அதனால்தான் இடிந்து விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.