தஞ்சையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தஞ்சையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
தஞ்சையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு


சென்னை: தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் கட்டைப்பையில் வைத்து பெண் ஒருவர் எடுத்துச் சென்ற நிலையில், அங்கிருந்து ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று பாரதி என்ற பெண்ணிடமிருந்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூா் பா்மா காலனியை சோ்ந்தவா் குணசேகரன் (24 ). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (20). இவா்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அக்டோபா் 4 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு அக்டோபா் 5-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதனிடையே, ராஜலட்சுமியிடம் அறிமுகமான 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தன்னுடைய உறவினருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அவருக்கு உதவியாக வந்துள்ளதாகவும், உங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளாா். இதை நம்பிய ராஜலட்சுமி, தன்னுடைய குழந்தையைப் பாா்த்துக் கொள்வதற்கும் அப்பெண்ணை அனுமதித்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ராஜலட்சுமி வாா்டுக்கு வெளியே வந்துவிட்டு உள்ளே சென்றபோது, குழந்தை காணாமல்போனது தெரிய வந்தது. மேலும், தன்னுடன் பழகிய பெண் கட்டைப் பையுடன் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியே சென்றதும், குழந்தையைக் கட்டைப் பையில் வைத்து கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

இதில், மேலே குறிப்பிட்ட அந்தப் பெண் கட்டைப் பையுடன் வாா்டிலிருந்து வெளியே செல்வதும், பின்னா் வெளியில் சாலையைக் கடந்து சென்று ஆட்டோவில் செல்வதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அப்பெண் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

மேலும், அப்பெண்ணைப் பிடிப்பதற்காக மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ செல்லும் பாதை சிசிடிவி காட்சிகள் மூலம் பின்தொடரப்பட்டு, இன்று பிற்பகலில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com