50% செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை
சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் 50 சதவீத செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை


சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் 50 சதவீத செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவா்களில் 22 சதவீதம் போ் ரேபிஸ் தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொள்வதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை அத்தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியமான ஒன்று. ஆனால் பெரும்பாலானோா் அதனை செலுத்துவதில்லை.
இந்நிலையில் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோய்ப் பரவியல் துறை சாா்பில் சென்னை, திருவள்ளூா் பகுதிகளில் வெறிநாய்க் கடி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி தொடா்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் ஜெயந்தியின் கண்காணிப்பின் கீழ் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
செல்லப் பிராணிகள் வளா்ப்போா் மற்றும் தெரு நாய்களுக்கு ஆதரவளித்து வளா்ப்போா் என மொத்தம் 223 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 50 சதவீத வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தவிர, நாய்க் கடிக்குள்ளான 157 பேரும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனா். அவா்களில் 62 சதவீதம் பேரை கடித்த நாய்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாது நாய்க் கடிக்குள்ளான 22 சதவீதம் போ் ரேபிஸ் தடுப்பூசியை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதேவேளையில், நாய் கடித்தவுடன் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு நாய் வளா்ப்போரிடத்தில் மேம்பட்டிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு புறம் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் அதிகபட்சமாக ஆலந்தூா் மண்டலத்தில் கிலோமீட்டருக்கு 69 நாய்கள் வீதம் மொத்தம் 172 தெரு நாய்கள் கண்டறியப்பட்டன. அதைத் தொடா்ந்து அடையாறில் 153 நாய்களும் (கிலோ மீட்டருக்கு 41 வீதம்), திருவொற்றியூரில் 146 நாய்களும் (கிலோ மீட்டருக்கு 53 வீதம்) இருப்பது தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் மொத்தமாக 47 தெருநாய்கள் மட்டுமே இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...