

பவானி: பவானி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தேவநாதன் (53). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திராணி (51). மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மேட்டூர், மேச்சேரி, குலாலர் வீதி, சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் சத்தியசீலன் (24). இவர், தேவநாதன் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தேவநாதனும், இந்திராணியும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் செல்ல, உடன் சத்தியசீலனையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் வியாழக்கிழமை இரவு கோவையிலிருந்து மேட்டூர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தேவநாதன் ஓட்டிச் சென்றார். பவானி - மேட்டூர் சாலையில் காடப்பநல்லூர் பிரிவு அருகே சென்றபோது, மேட்டூரிலிருந்து பவானி நோக்கி வந்த லாரியும் காரும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனைக் கண்ட அப்பகுதியினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூவரையும் மீட்க முயன்றனர்.
இவ்விபத்தில் கார், லாரியின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டதால் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பவானி போலீஸார் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி, இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டனர். பரிசோதனையில் மூவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.