கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக். 1-க்கு ஒத்திவைப்பு 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேரில் ஆஜராகாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1-ஆம்  தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜரான சயன் மற்றும் வாளையாறு மனோஜ்
உதகையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜரான சயன் மற்றும் வாளையாறு மனோஜ்
Published on
Updated on
2 min read


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேரில் ஆஜராகாததால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 1-ஆம்  தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக கனகராஜ். சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக சயன், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,  9 பேர் ஜாமீனில் உள்ளனர். 

வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். 

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயன் மற்றும் உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். வழக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதிக்கு(இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகியிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் தற்போது கேரளத்தில் உள்ளதால், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஜராகவில்லை.

அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். சாட்சிகள் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் ஆஜராகினர். விசாரணை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இன்றைய விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடராஜன் ஆஜராகவில்லை.
அவருக்கு போலீஸார் சம்மன் வழங்கவில்லை என தெரிகிறது.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்குரைஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினர்.

அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை அக்டோபர் மாதம் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

அரசு வழக்குரைஞர் ஷாஜகான் கூறும் போது, ‛அரசு தரப்பில் இவ்வழக்கில் புலன் விசாரணை கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, மேல் புலன் விசாரணையும் தேவைப்படுவதால் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று நீதிபதி சஞ்சய் பாபா அக்டோபர் 1 ஆம் தேதிக்குஒத்தி வைத்தார். 

கொடநாடு எஸ்டேட்டில் ஒரு காவலாளி தாக்கப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சந்தேக மரணமடைந்துள்ளார்.  எஸ்டேட் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவை தனித்தனி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்பதால் மேல் புலன் விசாரணை தேவைப்படுகிறது.

இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக  ஏற்கனவே மனு தாக்கல் செயய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். கூடுதல் விசாரணையால் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இவ்வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்’ என்றார்.

வழக்குரைஞர் கே.விஜயன் கூறும் போது, ‘சயனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல இதுவரை வழக்குரைஞர் இல்லாமல் இருந்த வாளையாறு மனோஜூக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞர் முனிரத்னம் நியமிக்கப்ப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சஜீவன் உள்பட 10 பேரை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தோம்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com