ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் நாள் வாழ்த்து

ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி என ஆசிரியர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி என ஆசிரியர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள்! பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள்! இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள்!
வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
கள்வராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
எனப் போற்றப்படும் கல்வி. அதனைப் பயிற்றுவிக்கும் பணியினை ஈடுபாட்டோடு செய்து வரும் ஆசிரியர்கள், சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்.
ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று.
அது, மனிதர்களை - அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி; புனிதப்பணி!
கைதேர்ந்த சிற்பிகளால்தான் கல்லையும் சிலையையும் வேறுபடுத்த இயலும். ஆசிரியரும் அவ்வாறே மாணவர்களின் அறியாமையைக் கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளைப் புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார். உழவர் மேடு பள்ளங்களைச் சமன் செய்து நீர்பாய்ச்சி, உழுது உரமிட்டுப் பயிர் செய்து அறுவடை செய்கிறார். ஆசிரியர் ஏற்றத்தாழ்வும், அறிவின்மையும், வறுமையும் உடைய மாணவர்களின் மனதைப் பண்படுத்தி அவர்களிடமிருந்து அறிவை அறுவடை செய்கிறார்.

மாணவர்கள் இடைநிற்றலின்றி கற்கவும் தரமான கல்வியைப் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூகத்தை வளப்படுத்தவல்ல ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்பத் தம்மை வலுப்படுத்திக் கொண்டு, மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப, கல்வி வளர்ச்சியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வளர்ந்து வரும் உலகின் அத்தனைப் பரிமாணங்களையும் மாணவர்களை அறியச் செய்து, நேர்மை, ஒழுக்கம், உண்மை என்ற அறநெறிகளில் பிறழாது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாக உருவாக்கும்
தன்முனைப்போடு செயல்பட வேண்டுமாய் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னரும் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்று இன்புறச் செய்யும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com