அண்ணா சிலைக்கு தீ வைப்பு: மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: 'தமிழ்நாடு’ என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் அண்ணாவின் சிலையைக் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. 

அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட அடிமைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. 

இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது.

வைகோ: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது. 

இந்த இழிவான செயலில் ஈடுபட்ட காவிக்கும்பலைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.

இத்தகைய நாசகார கூட்டத்திற்கு துணை நிற்பவர்களையும் தமிழக மக்கள் முற்றாகத் துடைத்து எறிவார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதைக் காட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com