பிரசாரம் ஓய்ந்தபின் என்னவெல்லாம் செய்யக் கூடாது? சத்யபிரத சாஹு அறிவுரை

அரசியல் கட்சியினர் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
பிரசாரம் ஓய்ந்தபின் என்னவெல்லாம் செய்யக் கூடாது? சத்யபிரத சாஹு அறிவுரை
பிரசாரம் ஓய்ந்தபின் என்னவெல்லாம் செய்யக் கூடாது? சத்யபிரத சாஹு அறிவுரை
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்வு பெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் 39.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6.4.2021 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். 

4.4.2021 அன்று மாலை 7.00 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-

(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3) பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 4.4.2021 அன்று மாலை 7.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 4.4.2021 அன்று மாலை 7.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வரும் எண்ணிக்கையில் வாகன அனுமதி அத்தொகுதியில் பெற உரிமை உண்டு.

அவை வருமாறு:-
(i) அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்
(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும்
(iii) கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எநதவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com