வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு

வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு விழா வருகிற 29ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பொது மக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 
பேண்டு வாத்தியம் அடித்து மக்களுக்கு கோயில் குடமுழுக்கு விழா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு
பேண்டு வாத்தியம் அடித்து மக்களுக்கு கோயில் குடமுழுக்கு விழா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு

சீர்காழி: புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வருகிற 29ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பொது மக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வெளியூர் பக்தர்கள், நேரடியாக வருகை புரிவதைத் தவிர்த்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கிட வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவினை நேரில் காண முடியாத பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விதமாக தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதுபோல காரைக்கால் பண்பலையில் நேரலை ஒலி பரப்பு செய்யப்படும்.

வைத்தீஸ்வரன்கோயிலில் திருக்கோயில் அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதை செயல் அலுவலர் கு.குகன் பார்வையிடுகிறார்.
வைத்தீஸ்வரன்கோயிலில் திருக்கோயில் அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதை செயல் அலுவலர் கு.குகன் பார்வையிடுகிறார்.

திருக்கோயிலுக்குள் பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றும் வீட்டு மாடிகளில் நின்றும் தரிசிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செயல் அலுவலரின் உத்தரவின் படி வைதீஸ்வரன்கோயில் நகர் பகுதியில் பேண்டு வாத்தியம் அறிவிப்பு செய்யப்பட்டது.

பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டவை:

வணிக மற்றும் குடியிருப்புக் கட்டிடங்களில் வெளிநபர்களை அனுமதித்து கூட்டம் சேர்க்கக் கூடாது. பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல் அல்லது மாடியில் நின்று தரிசிக்கும் போதும்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நிச்சயமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். விபத்தினை தவிர்க்க பாதுகாப்பற்ற முறையில் மொட்டை மாடி விளிம்பு,  கைப்பிடி சுவரில் மற்றும் சூரிய தடுப்பில் ஏறி நிற்க வேண்டாம்.

மாடியில்  நெருக்கமாக செல்லும்  மின்கம்பிகளின் அருகே செல்ல வேண்டாம்.
காலையிலேயே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் குடிநீர் வைத்துக் கொள்ளுங்கள். வயதானவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்.
பழுதடைந்த கட்டிடங்கள்  மீதோ மரங்களின் மீதோ ஏற வேண்டாம்.

இவ்வாறு நகர் முழுக்க பேரூராட்சி பணியாளர்கள் தண்டோரா அறிவிப்பு செய்தனர்.

கிருமிநாசினி தெளிப்பு

திருக்கோயிலை ஒட்டிய வீட்டு மாடிகளில் நின்று குட முழுக்கு விழாவினை பொது மக்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் முன்னெச்சரிகையாக ஒவ்வொரு வீட்டு மாடியிலும்  இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப் படுகிறது. மேலும் குடமுழுக்கு விழா முன்னிட்டு நான்கு வீதிகள் மற்றும் மடவிளாகங்ளில் டேங்கர் மூலம் சுமார் பத்தாயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com