சொகுசாக வாழும் நடிகர்களைப் போல அல்ல சித்தார்த்: கே.எஸ். அழகிரி ஆதரவு

நடித்துக் கிடைக்கும் வருவாயில் சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போகும் நடிகர்கள் மத்தியில்..
சொகுசாக வாழும் நடிகர்களைப் போல அல்ல சித்தார்த்: கே.எஸ். அழகிரி ஆதரவு
சொகுசாக வாழும் நடிகர்களைப் போல அல்ல சித்தார்த்: கே.எஸ். அழகிரி ஆதரவு

நடித்துக் கிடைக்கும் வருவாயில் சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போகும் நடிகர்கள் மத்தியில்.. சமூகத்தின் மீது இருக்கும் பற்று காரணமாகவே இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்துகிறார் சித்தார்த் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் ட்விட்டர் மூலம் துணிவுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்கள் நலனில் அக்கறையோடு, நியாயக் குரல் எழுப்பியவர் நடிகர் சித்தார்த். 

கரோனாவின் இரண்டாவது அலையின் போது, மக்கள் படும் துயரத்தைப் பல பிரபலங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் இவரது குரல் வித்தியாசமாக இருந்து வருகிறது. இவர் ஒருவர் மட்டுமே துணிவோடு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரை தேசப் பற்றாளர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.

சமீபத்தில் மேற்கு வங்க மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு நடிகர் சித்தார்த் கடுமையாக பதில் ட்வீட் செய்திருந்தார். அதில்,”உங்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற்றும் நாளில் தான் இந்த நாடு உண்மையிலேயே தடுப்பூசியைப் பெறும். அந்த நாள் வரும். இந்த ட்வீட்டை நினைவுபடுத்துவதற்காகவாவது நாங்கள் இங்கேயே இருப்போம்..” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொருவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவோம் என பா.ஜ.க. நிர்வாகிகள் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததற்குப் பதில் அளித்து இந்த கருத்தை நடிகர் சித்தார்த் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது பிரசாரம் செய்தால், அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார். இதற்குப் பதில் அளித்து ட்வீட் செய்திருந்த சித்தார்த், ”பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் கன்னத்தில் விழும் அறையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்று கடுமையாக கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 

கரோனா தொற்றால் கொத்து கொத்தாக மடிகிற நேரத்தில் ஒரு முதலமைச்சர் இத்தகைய கருத்து கூறும்போது அதனால் எழுகிற நியாயமான சீற்றத்தின் காரணமாகவே இத்தகைய கடுமையான கருத்தை நடிகர் சித்தார்த் பகிர்ந்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், பாராட்டும் கிடைத்தது.

இந்நிலையில், சித்தார்த்தின் தொலைப்பேசி எண்ணை வெளியிட்டு, அவரை விமர்சித்துத் துன்புறுத்துமாறு தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் தமிழக பா.ஜ.க.வினர் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து, ”500க்கும் மேற்பட்டோர் என் செல்பேசி எண்ணுக்கு போன் செய்து, கொலை செய்துவிடுவோம் என்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோம் என்று மிரட்டுகிறார்கள்” என்று ட்வீட் செய்திருந்தார். 

இந்த ட்வீட்டை பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டேக் செய்துள்ளார் சித்தார்த். இது குறித்து காவல் துறையிலும் புகார் செய்துள்ளார். பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பயமின்றி விமர்சித்து வருபவர் சித்தார்த். நடித்துக் கிடைக்கும் வருவாயில் சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போகும் நடிகர்கள் மத்தியில்,. சமூகத்தின் மீது இருக்கும் பற்று காரணமாகவே இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்துகிறார். அவர் கருத்துக்குப் பதில் அளிக்கத் திராணியற்ற பா.ஜ.க. வினர், இது போன்ற கேவலமான வன்முறையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். 

தங்கள் பக்கம் நியாயம் இல்லாததால், சித்தார்த்தையும் அவரது குடும்பத்தாரையும் மன ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கை, ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கம், கரோனா பொது முடக்கத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு, வேலையிழப்பு ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தவர். பல்வேறு பிரச்னைகளில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைக் கண்டித்தும் நடிகர் சித்தார்த் ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் ஆட்சி செய்கிறோம் என்ற ஆணவத்துடன் இருப்பதால், பா.ஜ.க.வினர் அனைவருமே சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ரஸ் கிராமத்தில் உயர் வகுப்பு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 19 வயது தலித் பெண்ணுக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தை நேரில் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கொடுமையான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார். 

சித்திக் கப்பனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், அவரை டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையை நிறைவேற்றாமல் உத்தரப்பிரதேச அரசு காலம் தாழ்த்தி உதாசீனப்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற ஆணையையே செயல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பை உத்தரப்பிரதேச மாநில ஆதித்யநாத் அரசு செய்து வருகிறது.

பாசிச, ஜனநாயக விரோத அணுகுமுறையை கொண்டுள்ள பா.ஜ.க.வினர், நடிகர் சித்தார்த் அவர்களின் ஆரோக்கியமான, மக்கள் உரிமை சார்ந்த கருத்துக்களை வெளியிட்டதற்காக இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். 

நடிகர் சித்தார்த் கொடுத்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com