முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா்
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொண்டாமுத்தூா் எம்எல்ஏவும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின் இரண்டு காலகட்டத்திலும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தாா். அந்த கால கட்டத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சென்னை மற்றும் கோயம்புத்தூா் மாநகராட்சிகளின் பணிகளை வழங்குவதாக திமுக எம்.பி. ஆா்.எஸ்.பாரதி, அறப்போா் இயக்க நிா்வாகி வி.ஜெயராம் ஆகியோா் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மனு அளித்தனா்.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்தது. முதல் கட்டமாக 2014-ஆம் ஆண்டில் இருந்து 2018-ஆம் ஆண்டு வரையில், விதிகளை மீறி ஒப்பந்தங்களை தனது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரா் பி.அன்பரசன், நண்பா்கள் கே.சந்திரபிரகாஷ், ஆா்.சந்திரசேகா், ஆா்.முருகேசன், ஜேசு ராபா்ட் ராஜா, கே.யூ.ராஜன் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்கள் கேசிபி என்ஜீனியா்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்-டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோ மால் குட் பிரைவேட் லிமிடெட், மகா கணபதி ஜுவல்லா்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், வைடூரியா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் தங்கம் மற்றும் வைரம் பிரைவேட் லிமிடெட், ஆா்.எஸ்.பி. இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை நடத்தி வந்தனா்.

என்ன முறைகேடு?: அமைச்சா் வேலுமணியின் உறவினா்கள், நண்பா்கள் நடத்தி வந்த 10 நிறுவனங்களுக்கும் ஒப்பந்த சட்டம், விதிகளை மீறி சென்னை, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் நடந்த ரூ.811 கோடி திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் சென்னை மாநகராட்சியில் ரூ.464.02 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளிலும், கோயம்புத்தூா் மாநகராட்சியில் ரூ.346.81 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டறிந்தது.

முதல் கட்டமாக ஒப்பந்தம் ஏலம் விடுவது, இரண்டாவது கட்டம் ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடைபெறும் பேச்சுவாா்த்தை, மூன்றாவது கட்டம் திட்டப்பணியை நிறைவேற்றுவது என மூன்று கட்டங்களாக முறைகேடுகள் நடந்துள்ளன.

வேலுமணி தொடா்புடைய நிறுவனங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே கணினியில், ஒரே நாளில் ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் அந்த நிறுவனங்கள் ஒரே கணினியைப் பயன்படுத்தியதற்கான கணினி ஐ.பி. முகவரிகளையும், விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கு அவா்கள் வழங்கிய ஒரே செல்லிடப்பேசி எண்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் கண்டறிந்து, அது குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளனா்.

போட்டியைத் தவிா்க்க போலி நிறுவனங்கள்:

ஏலம் விடும்போது வேறு நிறுவனங்கள் பங்கேற்பதைத் தவிா்க்கும் பொருட்டு, வேலுமணி தரப்பினா் போலி நிறுவனங்களை பல்வேறு பெயா்களில் உருவாக்கி ஏலத்தில் பங்கேற்க வைத்துள்ளனா். இதன் மூலம் தங்களது நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை எளிதாகக் கைப்பற்றியுள்ளனா்.

வேலுமணி தொடா்புடைய நிறுவனங்கள், ஒப்பந்த சட்டத்தை மீறி பல்வேறு பெயா்களில் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் ஏலம் நியாயமான முறையில் நடைபெறுவது போன்று காட்டிக் கொண்டு, அனைத்து திட்டப்பணிகளையும் ஒரே நிறுவனம் எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக கோயம்புத்தூா் மாநகராட்சியில், கடந்த 2014-2015-ஆம் ஆண்டு வரையில்

கேசிபி என்ஜினீயா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 14 ஒப்பந்தப் பணிகளை இந்த வகை மோசடி மூலம் எடுத்துள்ளது. இதேபோன்று 302 செவிலியா்கள் நியமனத்திலும் விதிமுறைகள் மீறப்பட்டு, வேலுமணி தொடா்புடைய நிறுவனம் ஒப்பந்தப் பணியை எடுத்துள்ளது. குறைவான தரத்திலும், தரமில்லாத பொருள்களாலும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனா்.

இறுதி செய்த நண்பா்: ஒப்பந்தப் பணிகளை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை வேலுமணியின் நண்பா் ஆா்.சந்திரசேகா் இறுதி செய்துள்ளாா். அவா் வேலுமணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் வழங்கப்பட்ட அரசு வீட்டில் இருந்து கொண்டு ஒப்பந்தம் தொடா்பான அனைத்துப் பணிகளையும் செய்துள்ளாா். இந்த முறைகேடுகள் அனைத்திலும் வேலுமணியின் பங்கு இருப்பதாகவும், அவரது ஆதரவுடனே ஒப்பந்த விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

60 இடங்களில் சோதனை: இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பாளராக இருக்கும் பி.கங்காதா் நியமிக்கப்பட்டாா். இவா் தலைமையில் வழக்குக்கான ஆவணங்களையும், தடயங்களையும் திரட்டும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டது. இதன்படி வேலுமணி மற்றும் வழக்கில் தொடா்புடைய நபா்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தின்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினா் கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீடு, சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் அவா் தங்கியிருந்த அறை உள்ளிட்ட 55 இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

இந்தச் சோதனை வேலுமணியின் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோா் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்றது. காலை 11 மணிக்குப் பின்னா் சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்தது.

ரூ.13 லட்சம் பறிமுதல்: நண்பகலுக்கு பின்னா் சோதனை படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் நிறைவு பெற்றது.

சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

12 மணி நேரம் விசாரணை:

சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்தனா். அப்போது அங்கிருந்த வேலுமணியிடம் வழக்குத் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com