'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்

இப்படி ஏமாற்றுவார்கள், அப்படி ஏமாற்றுவார்கள் என்று காவல்துறையினர் நாள்தோறும் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்


இப்படி ஏமாற்றுவார்கள், அப்படி ஏமாற்றுவார்கள் என்று காவல்துறையினர் நாள்தோறும் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இந்த எச்சரிக்கைத் தகவல்களை எல்லாம் பொதுமக்கள் பார்க்கிறார்களோ, படிக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் மோசடியாளர்கள் படித்து உடனடியாக எச்சரிக்கையாகிவிடுகிறார்கள். பிறகு அந்த வழியைப் பின்பற்றுவதில்லை.

உடனடியாக, மோசடி செய்ய அடுத்த வழியைக் கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த முறையில் மோசடி நடைபெற்று, புகார் வந்து அது குறித்து காவல்துறையினர் விசாரித்து, மக்களை எச்சரிப்பதற்குள், பல மோசடிகளை அரங்கேற்றி விடுகிறது இந்த மோசடிக் கும்பல்.

ஒவ்வொரு நாளும் இவ்வாறு நடந்த பல மோசடிகள் குறித்த செய்திகளும் வெளிவந்த வண்ணம்தான் உள்ளது. அதற்குக் காரணம், மக்களின் அறியாமை மட்டுமல்ல, மோசடியாளர்களின் யுக்தியும்தான்.

அந்த வகையில், புதிய மோசடி என்ன என்பது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது. புதிய வகை மோசடியில் ஈடுபடும் கும்பலைப் பற்றிய தகவல் சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

ஒரு நிமிடம், நமக்கே இப்படி தொலைபேசி அழைப்பு வந்தால், எத்தனை படித்த, அறிவுள்ள நபர்களாக இருந்தாலும், அனைத்தையும் மறந்து, ஐயோ, ஒருவருக்கு உதவ வேண்டுமே என்ற மனிதாபிமானம் பொத்துக் கொண்டு நம்மையறியாமல் தவறிழைத்து விடுவோம் போல இருக்கிறது இந்த எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டிருக்கும் விவரம்.

அதாவது, தொலைபேசியில் அழைக்கும் நபர், ஹலோ.. மேடம் தில்லியிலிருந்து பேசுகிறேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, என்னோட நம்பருக்குப் பதிலாக தவறுதலாக உங்களுடைய செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து விட்டேன்.

உங்கள் எண்ணிற்கு தற்போது ஓடிபி வந்திருக்கிறது. அதனைக் கூறினால்தான் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறி ஓடிபியைப் பெற்று மோசடியில் ஈடுபடுகிறார்களாம். 

இப்படி ஒரு சாமானிய, ஒன்றுமறியா மக்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால், பாவம் என்ன செய்வார்கள்? அவர்களது அப்பாவித்தனத்துக்கு வங்கிக் கணக்கிலிருக்கும் சில பல ஆயிரங்கள்தான் அபராதம். பிறகு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல அவர்கள் யாருக்கும் ஓடிபி எண்ணை சொல்ல மாட்டார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இது பற்றி எச்சரிக்கையை ஏற்படுத்துவார்கள்.

இது மட்டுமல்ல, ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருள்கள் தருவதாகவும், மிகப்பெரிய ஆஃபர் என்றும் வரும் லிங்குகளை தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். என்னதான் தலைகீழாக நின்றாலும் ஓடிபி என்பது யாருடனும் பகிரக் கூடாத எண். அது எப்படியாகினும் இருந்து போகட்டும். எவ்வளவு இக்கட்டாக இருந்தாலும் சரி.. உங்கள் ஓடிபி உங்களுக்கு மட்டுமே. அதை மட்டுமாவது நமக்குச் சொந்தமாக வைத்துக் கொண்டு ஏமாற்றும் மோசடியாளர்களிடம் ஏமாறாமல் தப்பித்துக் கொள்வோம். இதைத் தான் காவல்துறையினர் பல வழிகளில் விழிப்புணர்வாக எடுத்துக் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இணையதளத்தில் தங்களுக்கு பணமோசடி ஏற்பட்டால் உடனடியாக இலவச உதவி எண் 155260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். உங்கள் பணம் உடனடியாக பாதுகாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் ஏற்படும் குற்றங்கள் தொடர்பாக www.cybercrime.gov.in (National cybercrime reporting portal) என்ற இணையதளத்தில் இருக்கும் இடத்தில் இருந்தோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையங்களிலோ அல்லது மாவட்ட இணைய குற்ற காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம்.

பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிராமல் விழிப்புணர்வுடன் இருந்து எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் ஏமாறாமல், தங்கள் புகழையும் பணத்தையும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுமாறும் காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com