கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் சயன் சொன்ன வாக்குமூலம் என்ன..?

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் முதன்மையானவரான சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்
கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் சயன் சொன்ன வாக்குமூலம் என்ன..?

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் முதன்மையானவரான சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது. இதையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிபார்க்கப்படுவதால் அதிமுகவினர் அச்சத்தில் உள்ளனர். 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. சுமார் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்களாவில் ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தப்போது அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், கொடநாடு பங்களா களையிழந்துவிட்டது என ஊழியர்கள் கூறிவந்தனர். அப்போதைய சூழலில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி கர்நாடகம் மாநிலம் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான், எஸ்டேட்டில் அதே ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் புகுந்த கொள்ளையா்கள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும், பொருள்களையும் கொள்ளை அடித்து தப்பிச் சென்றனா். இந்த சம்பவத்தின்போது அங்கு பணியிலிருந்த ஓம்பகதூா் என்ற காவலாளி கொல்லப்பட்டாா். 

இச்சம்பவத்துக்கு முன்னரே அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் சம்பவத்தின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

கொடநாட்டிலிருந்து தப்பிய கொள்ளையா்கள் உதகை வழியாக கூடலூருக்குச் சென்று அங்கிருந்து கேரளம் மாநிலத்துக்கு தப்பிச் சென்றது விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடையதாக கேரளத்தை சேர்ந்த சயன், வாளையாறு மனோஜ் சாமி, தீபு, ஜித்தின் ஜாய், ஜம்ஷோ் அலி, உதயகுமாா், சந்தோஷ்சாமி, சதீஷன் மற்றும் பிஜின் குட்டி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அப்போது இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சயன், வாளையர் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவா்களில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோா் தில்லியில் செயல்பட்டு வரும் தனியாா் புலனாய்வு ஊடகத்தின் மூலம் இந்த சம்பவத்திற்கு காரணமானவா்கள் என முக்கிய பிரமுகா்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தனா். இதையடுத்து இதுதொடா்பாக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

ஏனைய 8 போ் ஜாமீனில் வெளியில் இருந்த நிலையில் இவா்கள் இருவருக்கும் அண்மையில் சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, இவா்கள் உதகையிலேயே தங்கிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே இவ்வழக்கில் மேலும் பல முக்கியத் தகவல்களை கூறப்போவதாக சயன் தரப்பிலும், கூடுதலாக சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென வழக்குரைஞா்களின் தரப்பிலும் உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சயன் கோத்தகிரி காவல் நிலையத்தில் அளித்த மனுவின் பேரில் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் சுமார் 3 மணி நேரம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய நபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக புதிதாக ஒரு வாக்குமூலம், பல்வேறு முக்கியத் தகவல்களையும்  அளித்துள்ளாா்.  இதையடுத்து சயன் வாக்குமூலம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

கொடநாடு சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சேலத்தில் காா் விபத்தில் உயிரிழந்தததும், கொடநாடு எஸ்டேட்டில் கணிணி உதவியாளராக இருந்த சதீஷ் தற்கொலை செய்து கொண்டதும், கோவையிலிருந்து கேரளம் நோக்கி குடும்பத்தினருடன் சென்ற சயனின் காா் விபத்துக்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்ததும் இந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ளதோடு, கொடநாடு பங்களாவில் உள்ள அறைகள், ஜன்னல்கள், செல்லும் வழி என அனைத்து தகவல்களையும் அறிந்த ஆளம் கட்சியைச்சேர்ந்த ஒருவர் தான் இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் தனது உயிருக்கும் இருந்த அச்சுறுத்தலின் காரணமாகவே பல்வேறு உண்மைகளை இதுவரையிலும் வெளியில் கூறாமல் இருந்ததாக சயன் தெரிவித்துள்ளாா். இந்த வாக்குமூலம் தான் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்பத்தியுள்ளது. 

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு ஆகஸ்ட் 27 இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறிய விசாரணை அதிகாரி வேல்முருகன், அப்போது தான் இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு  தான் சயானிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்த முழு விபரம் உதகை நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அதிமுகவினர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக சட்டப்பேரவையில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற அடிப்படையில் பேசி இங்கே ஒரு பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் கிளப்பி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொருத்தவரையில், தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

நள்ளிரவில் நடைபெற்ற அந்தக் கொள்ளைச் சம்பவத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற மரணங்கள், விபத்து மரணங்கள் போன்றவை அப்போதே மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் அந்தக் கொள்ளை, கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர் என்று ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்துடன் அல்ல. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடோ அல்லது பழிவாங்குகின்ற எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் அதற்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ அரசுக்கு நிச்சயம் இல்லை என்றும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பு தான் கொடநாடு வழக்குக்குறித்து விசாரணையை துரிதப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இந்நிலையில், அதிமுகவினர் மீது பொய் வழக்கினை திமுக தொடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி பேரவையிலிருந்து அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. மேலும் தன்னை இந்த கொலை, கொள்ளை வழக்கில் இணைக்க சதி நடப்பதாக முன்னாள் தமிழக முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர். 

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது, ஊழல், வசூல் செய்வதை மட்டும் தான் இன்றைய திமுக அரசின்  100 நாள் சாதனை. நாங்கள் செய்த வளர்ச்சி திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று வந்து எந்த பணியும் செய்யாமல் முடங்கியுள்ளது.

ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஆளுங்கட்சியினர் அதில் அதிகாரம் செலுத்தி, தாங்கள் தான் அந்த பணியை செய்ய வேண்டும் என கிராமப்புற வேலைவாய்ப்பை தடுத்துள்ளனர். முன்பு அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த போது, 13 அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதை வேகமாக முடிக்க திமுக செயல்படுகிறது. அதை மறைக்க முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி மீது வழக்கு பதிவு செய்து அவதூறு பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தனர்.  

மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சாட்சியெல்லாம் விசாரிக்கப்பட்ட பிறகு, மறுவிசாரணை வேண்டும் என முதல்வர் கூறுகிறார். குறுக்கு வழியில் இந்த வழக்கை ஜோடித்து மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சிக்கிறார். 

இந்த 100 நாளில் மக்களுக்கு சோதனையும், வேதனையும் செய்தது தான் திமுக அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com