
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் இருந்ததாக விமானப்படை உறுதி செய்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஆய்வுக்காக, கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கியது.
இதையும் படிக்கலாமே.. தில்லியிலிருந்து வந்தவர்கள் பட்டியல்: விபத்தில் சிக்கினார்களா?
நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில், மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், 14 பேர் பயணம் செய்துள்ளனர். 9 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர்களின் உடல்களை ராணுவத்தினர் தேடி வருகின்றனர். காயமடைந்தவர்களில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்யக் கூடியது என்றும், அதில் பயணம் செய்த உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பகல் 12.20 மணிக்கு: இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
பகல். 1.43 மணிக்கு: முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் பயணித்த எம்.ஐ. வகை ராணுவ ஹெலிகாப்டர், தமிழகத்தில் கோவை - சூலூர் அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்.. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - புகைப்படங்கள்
விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதும், ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்ததாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடித்தான் தீயை அணைக்க முடிந்ததகாவும் கூறுகிறார்கள்.
பிற்பகல் 02.40: விபத்து நிகழ்ந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.