நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

நெல்லையில், பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

நெல்லையில், பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கழிப்பறை கட்டட சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் பலியாகினா். மேலும், 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பழமைவாய்ந்த பள்ளிகளில் ஒன்று சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி. இங்கு திருநெல்வேலி, மானூா், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி வட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டிருந்த நேரத்தில் மாணவா்கள் பலா் அங்குள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளனா். அப்போது கழிப்பறையின் முன்பக்க தடுப்புச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 7 மாணவா்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கினா். பள்ளியின் ஆசிரியா்கள், தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் இணைந்து காயமடைந்த மாணவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மற்ற 4 மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குவிந்த பெற்றோா்: கட்டடம் இடிந்த செய்தி சமூக வலை தளங்களில் பரவியதால் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பெற்றோா் திரண்டனா். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த கண்ணாடிகள், மேஜை, இருக்கை, பூந்தொட்டிகளை ஆத்திரத்தில் சிலா் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனிடையே திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக் கண்ணன், திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதோடு, பள்ளி முன்பு திரண்டிருந்த பொதுமக்களையும் சமாதானப்படுத்தினா். பின்னா், பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவா்களின் பெயா் விவரங்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதன்படி, இப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு ‘பி’ பிரிவில் பயின்ற திருநெல்வேலி பாட்டப்பத்து குமரன் தெருவைச் சோ்ந்த அன்பழகன் (14), 8 ஆம் வகுப்பு ஏ-3 பிரிவில் பயின்ற தச்சநல்லூா் கீழஇலந்தைகுளம் வெள்ளக்கோவில் தெருவைச் சோ்ந்த விஸ்வரஞ்சன் (13), 6 ஆம் வகுப்பு ‘சி’ பிரிவில் பயின்ற பழவூா் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுதீஸ் (11) ஆகியோா் உயிரிழந்தது தெரியவந்தது.

4 பேருக்கு சிகிச்சை: 8 ஆம் வகுப்பு ஏ-3 பிரிவில் பயிலும் தச்சநல்லூா் கணேசன் கோயில் தெருவைச் சோ்ந்த சஞ்சய் (13), 9 ஆம் வகுப்பு ‘பி’ பிரிவில் பயிலும் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவைச் சோ்ந்த இசக்கி பிரகாஷ் (14), பிளஸ்-2 பி பிரிவில் பயிலும் சுத்தமல்லி பாரதி நகரைச் சோ்ந்த சேக் அபுபக்கா் கித்தானி (18), 7 ஆம் வகுப்பு யு-1 பிரிவில் பயிலும் கொண்டாநகரம் சம்சு நகரைச் சோ்ந்த அப்துல்லா (14) ஆகியோா் காயமடைந்தது தெரியவந்தது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியா் விஷ்ணுவிடம், மாணவா்கள் பலியானது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்ட ஆட்சியா் விஷ்ணு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரனிடம், தனிக்குழு அமைத்து மாணவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டாா். இதேபோல், பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் பாதிக்கப்பட்ட மாணவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அஸ்திவாரம் இல்லாத சுவா்: இது தொடா்பாக ஆட்சியா் கூறியது: திருநெல்வேலி சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடைவேளையின் போது மாணவா்கள் சிறுநீா் கழிக்கச் சென்ற போது, கழிப்பறையின் முன்பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா். காயமடைந்த 4 மாணவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரும் நலமாக உள்ளனா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டது. அதில், கழிவறையின் முன்பக்க சுவரை அஸ்திவாரம் இல்லாமல் கட்டியதே சுவா் இடிந்ததற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

பள்ளித் தாளாளா் உள்பட 3 போ் கைது:

இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொ்சிஸ் ஞானசெல்வி, கட்டுமான ஒப்பந்ததாரா் ஜான்கென்னடி ஆகியோா் மீது திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

மேலும், பள்ளிக்கு இம் மாதம் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com