புத்தொழில் ஆதார மானியம்: 19 புத்தொழில் முனைவோருக்கு முதல் தவணை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானியத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 19 புத்தொழில் முனைவோர்களுக்கு முதல் தவணை மானியத்திற்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
புத்தொழில் ஆதார மானியம்: 19 புத்தொழில் முனைவோருக்கு முதல் தவணை வழங்கினார் முதல்வர்
புத்தொழில் ஆதார மானியம்: 19 புத்தொழில் முனைவோருக்கு முதல் தவணை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானியத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 19 புத்தொழில் முனைவோர்களுக்கு முதல் தவணை மானியத்திற்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.12.2021) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானியத்திற்கு, டான்சீட் இரண்டாம் பாகத்தில் தெரிவு செய்யப்பட்ட 19 புத்தொழில் நிறுவனங்களுக்கு, முதல் தவணை மானியத் தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 95 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மூலங்களை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 

தமிழ்நாட்டினை உலகளாவிய புத்தாக்க மையமாகவும் புத்தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர்விடமாகவும் உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டமாகும்.

புத்தொழில்களுக்கு, உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் எனும் டான்சிம் வழிவகுக்கிறது.

அதன் அடிப்படையில், புத்தொழில் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் “டான்சிம்” நிறுவனம், ஒரு முதன்மை முயற்சியாக, டான்சீட் எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், புத்தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூபாய் 10 இலட்சம் வரை டான்சிம் நிறுவனம் வழங்குகிறது. புத்தொழில் முனைவோருக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 640 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு தீவிர தேர்வு செயல்முறையின் அடிப்படையில் உயர்மட்ட நிபுணர் குழுவால் கீழ்க்கண்ட 19 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கேம்பிரியோனிக்ஸ் லைப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட், டெராலுமென் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹலோ 24 டிஜிகாம் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்காணும் 19 புத்தொழில் நிறுவனங்களுக்கு, மானியத் தொகையாக ரூபாய் 10 இலட்சம் வரை வழங்கிடும் வகையில், முதல் தவணையாக தலா 5 இலட்சம் ரூபாய், என மொத்தம் ரூபாய் 95 இலட்சத்திற்கான காசோலைகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com